Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு :தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

Print PDF

தினமலர்          07.08.2012

குன்னூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு :தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

குன்னூர் : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய, ஊட்டி நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தும் லாரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரமான ரேலியா அணையின் நீர்மட்டம், பருவ மழை பொய்த்த காரணத்தால், வேகமாக குறைந்து வருகிறது. பிற குடிநீர் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தண்ணீர் பிரச்னை "தலைவலியாக' மாறி வருகிறது

. நீர்மட்டம் குறைவு:இதனால், நகராட்சி சார்பில் இரு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதேபோல, 9.6 அடி கொள்ளவு கொண்ட பந்துமி அணையில் தற்போது அரையடி மட்டுமே நீர் உள்ளதால், இங்கிருந்து தண்ணீர் வினியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காந்திபுரம் பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்துக்கு இது குறித்து புகார் அளித்ததன் பேரில், லாரிகளில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் வினியோகிக்க 4 லாரிகள் நகராட்சி சார்பில் இயக்கப்படும் நிலையில், தற்போது இரு லாரிகள் பழுதடைந்துள்ளன. ஒரு லாரி தகுதி சான்றிதழ் பெற அனுப்பப்பட்டுள்ளதால், ஒரு லாரி மூலம் 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர்.

மேலும் லாரியின் இழுவை திறன் குறைவாக உள்ளதால் மேடான பகுதிகளுக்கு லாரி செல்வதில்லை. லாரிகள் மூலம் வினியோகம்:

இந்நிலையில், குன்னூரில் அனைத்து வார்டுகளுக்கும் தண்ணீர் வினியோகிக்க, ஊட்டி நகராட்சியிலிருந்து ஒரு தண்ணீர் லாரி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரு தனியார் லாரிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால்    குன்னூர்   மக்கள்   ஆறுதலடைந்துள்ளனர். ரேலியா அணையில் மட்டுமே குடிநீர் இருப்பு உள்ள நிலையில்,   வரும்   நாட்களில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் சூழ்நிலை உள்ளது.