Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பவானிசாகர் நீர்மட்டம் உயர்த்த பில்லூர், பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Print PDF

தினகரன்   08.08.2012

பவானிசாகர் நீர்மட்டம் உயர்த்த பில்லூர், பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

ஈரோடு, : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்றதையடுத்து பில்லூர், பைக்காரா அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 9700 கனஅடி நீர்வரத்தானது.

பவானிசாகர் அணை யின் மொத்த கொள்ளளவு 105 அடி. அணையில் மொத்தம் 32 டிஎம்சி., நீர் சேமிக்க முடியும். நேற்று முன்தினம் வரையிலும் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்தது. அணை யில் நீர்இருப்பு மிகவும் குறைந்து போனதால் அணையிலுள்ள மீன்களை காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

மேலும் பவானிசாகர் அணையை நம்பியுள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தினசரி குடிநீர் விநியோகம் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. தற்போது தடப்பள்ளி- அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அவற்றின் பாசன காலம் முழுமைக்கும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுப்பணித்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்திலுள்ள பைக்காரா, மாயாறு அணைகளில் இருந்து பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர் மீண்டும் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1200 முதல் 1300 கனஅடி வீதம் ஆற்றின் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆயக்கட்டு அல்லாத பாசனதாரர்களான ஆற்றின் இரு கரையிலும் உள்ள விவசாயிகள் மெகா சைஸ் மோட்டார் மூலம் உறிஞ்சுவதாக பாசன விவசாயிகள் புகார் கூறினர். மோட்டார் பம்புசெட்டுகளின் மின் இணைப்பை துண்டிக்க பொதுப்பணித்துறையினர் மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். இருப்பினும் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக தண்ணீர் திருடுவது தொடர்ந்தது.இதன் காரணமாக தொடர்ந்து ஆற்றின் வழியே திறக்கப்பட்ட தண்ணீரில் குறிப்பிட்ட பங்கு நீரால் ஆயக்கட்டு அல்லாத பாசனதாரர்களே பயனடைந்தனர்.

நேற்று முன்தினம் வரையிலும் பவானி ஆறு மற்றும் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக வெறும் 100 முதல் 150 கனஅடி மட்டுமே நீர்வரத்தானது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை மாவட்டம் பில்லூர் அணை யில் இருந்தும், நீலகிரி மா வட்டம் பில்லூர்அணையில்இருந்தும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலையில் இருந்தே அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு கணிசமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

எனவே பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பவானி ஆற்றின் வழியாகவும், பைக்காரா அணையில் இருந்தும், மசினகுடி, முதுமலை பகுதிகளில் பெய்யும் மழைநீரும் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக பவானிசாகர் அணைக்கு கூடுதலாக நீர்வரத்தாகியுள்ளது. 6ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு திறக்கப்பட்ட தண்ணீர் 7ம் தேதி (நேற்று) காலை 8 மணியளவில் பவானிசாகர் அணையை வந்து சேர்ந்தது. காலை 8 மணிக்கு 1353 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அதிகபட்சமாக 9700 கனஅடியாக நீர்வரத்தானது. மாலை 4 மணிக்கு 8061 கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது

நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது. நேற்று மாலை அணையில் 1.8 டிஎம்சி., நீர்இருப்பு உள்ளது. கடும் வறட்சியால் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்திருந்த நிலையில் தற்போது நீலகிரியிலும், கேரளாவிலும் பெய்து வரும் மழை சற்றே பலன் அளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.