Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடியாத்தத்தில் ரூ.1.25 கோடியில் ராபின்சன் குளத்தை புனரமைக்க முடிவு

Print PDF

தினமணி             10.08.2012

குடியாத்தத்தில் ரூ.1.25 கோடியில் ராபின்சன் குளத்தை புனரமைக்க முடிவு

குடியாத்தம், ஆக. 9: குடியாத்தம் நகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து இங்குள்ள ராபின்சன் குளத்தை தூரெடுத்து, மழைநீரை சேகரிக்க முடிவெடுத்துள்ளன. சுமார் ரூ. 1.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத் திட்டத்துக்கு வெண்துளி நன்னீர் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது ராபின்சன் குளம். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்தக் குளம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி இக்குளம் முற்றிலும் வற்றிவிட்டது. குளத்தில் செடி, கொடிகள் வளரத் தொடங்கின. நாளடைவில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டத் தொடங்கினர். நகராட்சி ஊழியர்களும் நகரில் அள்ளும் குப்பைகளை, லாரிகள் மூலம் கொண்டுவந்து இக்குளத்தில் கொட்டினர்.

இதனால் மழைக் காலங்களில் குளத்தில் நீர்தேங்கி, சுற்றுப்பகுதி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மாசடைந்தது நிறம் மாறியது.

நகரில் வேறு நீர்த்தேக்கங்கள் எதுவும் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.இப்போது 500 அடியிலிருந்து 600 அடி ஆழம் வரை பூமியைத் துளைத்தால்தான் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் ராபின்சன் குளத்தை தூரெடுத்து, மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கவும், அதைச் சுற்றி பூங்காவும், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது.

இதனிடையே நகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. ராபின்சன் குளத்தில் உள்ள குப்பைகளை ரோட்டரி சங்கமே அகற்றி, குளத்தை சீரமைத்துத் தர உள்ளதால், இப்பணிக்கு ஏற்படும் செலவில், நகராட்சியின் பங்குத் தொகையாக, ரூ. 10 லட்சம் ரோட்டரி சங்கத்துக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்க உள்ள வெண்துளி நன்னீர் திட்டத்துக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அம்பாலால் அறக்கட்டளைச் செயலருமான கே.ஜவரிலால் ஜெயின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த திட்டத்துக்கான ஒப்பந்த படிவத்தை, நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம், ஜவரிலால் ஜெயினிடம் வழங்கினார். இந்தத் திட்டம் மூலம் குடியாத்தம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

Last Updated on Saturday, 11 August 2012 07:17