Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 90% நிறைவு: நகர்மன்றத் தலைவர் தகவல்

Print PDF

தினமணி            14.08.2012

 3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 90% நிறைவு: நகர்மன்றத் தலைவர் தகவல்

திருவண்ணாமலை, ஆக. 13: திருவண்ணாமலை நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.36.66 கோடியில் நடைபெற்று வரும் 3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன என்று திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் கூறினார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் 19 கி.மீ. தொலைவுக்கு 3-வது கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்கான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 600 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். இப் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், விரைவில் முடிந்துவிடும்.

இத்திட்டத்துக்காக அண்ணா நகர், திருக்கோயிலூர் சாலை, பச்சையம்மன் கோயில் பகுதி, தேனிமலை உள்ளிட்ட 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர் முழுவதும் பகிர்மான குழாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப் பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும்.

இப்போது நாள் ஒன்றுக்கு நகரம் முழுவதும் 130 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் நிறைவு பெற்றால் நாள் ஒன்றுக்கு 260 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

முன்னதாக, இத்திட்டம் குறித்து நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, பொறியாளர் பாஸ்கரன், குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார்.