Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி             17.08.2012

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு, ஆக 16: தென் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை அமைச்சர் கே.பி.முனுசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தென் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் நெம்மேலி ஊராட்சி சூளேரிக்காடு பகுதியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.771 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை கே.மனோகரன் ஆகியோர் வியாழக்கிழமை கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடலில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கடல் நீரை எடுத்து சுத்திகரிக்கும் மையத்தையும், தென் சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்ட இடத்தினையும் அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும், அனைத்துப் பணிகளையும் துரிதமாக முடிக்க குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர்  உத்தரவிட்டார். தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பதிலளித்து கூறியது:

÷தற்போது திட்ட மையத்தில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக அக்கரை வரை ஒரு பகுதியாகவும், அங்கிருந்து திருவான்மியூர் வரை ஒரு பகுதியாகவும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது. சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் வரை ஒரு பகுதியாக குழாய்கள் பதிக்கும் பணி முடிந்துள்ளது.

ஆனால் வேளச்சேரி பகுதியில் ஒரு இடத்தில் மட்டும் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடப்பதால் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தடைபட்டுள்ளது. சில தினங்களில் அங்கு அப்பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு விடும்.

செப்டம்பர் 15-ம் தேதிக்கு மேல் 45 நாள்கள் குடிநீர் பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு இம்மையத்தில் இருந்து தென் சென்னைக்கு கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும் பணிகள் முழு வீச்சில் தொடங்கும்.

கடலில் இருந்து 265 மில்லியன் லிட்டர் கடல் நீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, அதில் 100 மில்லியன் லிட்டர் நீர் மீண்டும் கடலில் விடப்படும் எனத் தெரிவித்தனர்.

ஆய்வின் போது சென்னை குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் அபூர்வ வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.சாந்தி குமார், நெம்மேலி ஊராட்சித் தலைவர் கே.இ.நாகப்பன், வடநெம்மேலி ஊராட்சி தலைவர் எஸ்.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 17 August 2012 10:46