Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அரும்பாவூர், பூலாம்பாடி மக்கள் பயன்பெறுவார்கள்

Print PDF

தினமணி            18.08.2012

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அரும்பாவூர், பூலாம்பாடி மக்கள் பயன்பெறுவார்கள்

பெரம்பலூர், ஆக. 17: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் மூலம் அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 525 குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் லட்சுமிபுரம், எழுமூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்களை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குன்னம் வட்டாட்சியர் அலுவலகம், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் ஊராட்சிகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து கேட்டறிந்த ஆட்சியர் கூறியது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 57 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில், 306 கிராமங்கள் மற்றும் அரும்பவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகள் பயனடையும்.

செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறுஞ்சும் நிலையத்திலிருந்து, இந்தத் திட்டத்துக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்கான பணிகள் பாடாலூர் பகுதி வரை நிறைவடைந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான நீர் உந்தும் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள், குடிநீரை சரியான முறையில் பயன்படுத்துகின்றனரா என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர். ஆய்வின் போது, ஒன்றியக்குழுத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், ரா. வெண்ணிலா, கூட்டுக் குடிநீர்த் திட்ட நிர்வாக பொறியாளர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் அறிவழகன், தங்கராஜன், உதவி இயக்குநர் அவிநாசிலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.