Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமலர்     23.08.2012

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர், போதிய அளவு கிடைக்காததால், பொட்டிதட்டி குடிநீர் திட்டத்தை, மீண்டும் புதுப்பிக்க, நகராட்சி ஆலோசித்து வருகிறது.

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தினமும் 36 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர், வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஒரு நபருக்கு தினமும் 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், தட்டுப்பாடால் 65 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.காவிரி வந்தும் பல இடங்களில் கானல்நீர் தான். சில நேரங்களில் சாக்கடை கலந்து வருவதால் பல காவிரி நீரை தவிர்த்து வருகின்றனர். இதை விட ஊரணிகள், விவசாய கிணறுகளில் இருந்து லாரிகளில், தனியார் கொண்டு வரும் தண்ணீர், சுவையாக இருக்கிறது. சமையலுக்கு உகுந்த, இந்த தண்ணீரை, மக்கள் முண்டியடித்து வாங்குவது(குடம் 3 ரூபாய்) அதிகரித்து வருகிறது.

இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, போகலூர் ஒன்றியம் பொட்டிதட்டியை ஒட்டியுள்ள, வைகை ஆற்றில் இருந்து, குடிநீர் கொண்டுவர, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நகராட்சி கமிஷனர் முஜூபுர் ரஹ்மான் கூறியதாவது: 1972 முதல் ராமநாதபுரத்திற்கு பொட்டிதட்டி வைகை ஆறு தான் முக்கிய குடிநீர் ஆதார. ராமநாதபுரத்தில் இருந்து 33 கி.மீ., தொலைவிலுள்ள வழியோர கிராமங்களான சத்திரக்குடி உட்பட்ட நான்கு கிராமங்கள் பயனடைந்தன. தற்போது, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலானதால் குடிநீர் குழாய் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. சில இடங்களில் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பட்சத்தில், ராமநாதபுரத்திற்கு கூடுதலாக குடிநீர் வழங்க முடியும். காவிரி குடிநீர், பொட்டி தட்டி தண்ணீர் என தனித்தனியாக சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.