Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Print PDF
தினமலர்              24.08.2012

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட குடிநீருக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வரும் 26ம் தேதியில் இருந்து குடிநீர் சப்ளை சீராகும் என்று தலைமை நீரேற்றும் நிலையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தெரிவித்தார். மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக கடும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் நேற்று மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா, கமிஷனர் மதுமதி, இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் கவுன்சிலர்கள் குழுவினர் நேற்று மாலை வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பாபநாசம் அணையில் இருந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட குடிநீருக்காகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கும் 405 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையை பொறுத்தமட்டில் நேற்றைய நீர்மட்டம் 41.05 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 324.42 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்குரிய குடிநீருக்கு மருதூர் அணைக்கட்டிற்கு 180 கனஅடி தண்ணீர் வந்துவிட்டது. இதனை பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் கெங்காதரன், உதவி பொறியாளர் ரகுநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

வல்லநாடு ஆற்றுக்கு தாமிரபரணி அணை நீர் வந்து விட்டதால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு பம்பிங் செய்யப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் சப்ளையில் இம்ரூம்மென்ட் ஏற்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் நாளை (25ம் தேதி) கங்கைகொண்டான் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மின்வாரியம் மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் வரத்து இருந்தாலும் ஆற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்படும். மாலையில் பணிகள் முடிந்த பிறகு குடிநீர் பம்பிங் செய்யப்படும். இதனால் வரும் 26ம் தேதி ஞாயிற்றுகிழமையில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை சீராக இருக்கும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் சசிகலாபுஷ்பா கூறுகையில், பாபநாசம் அணையில் இருந்து குறைவான அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இதனால் போதிய அளவிற்கு மாநகராட்சிக்கு குடிநீர் பம்பிங் செய்ய முடியாத நிலை உள்ளது.

மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரத்து நல்ல நிலைக்கு வரும் வரை தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குடிநீரை சிக்கனமான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது அணையில் தண்ணீர் திறப்பால் வரும் 26ம் தேதியில் இருந்து குடிநீர் சப்ளை ஒரளவுக்கு சீரடையும் என்றார்.
Last Updated on Friday, 24 August 2012 10:21