Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் குடிநீர் இணைப்பு மேயர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                      25.08.2012

மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் குடிநீர் இணைப்பு மேயர் எச்சரிக்கை

சென்னை, : கட்டுமானங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி எச்சரித்தார்.
சென்னை  மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைமை வகித்து மேயர் சைதை துரைசாமி பேசும்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

சென்னை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் கால்வாய்களின் முகத்துவாரங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய நுழைவாயில்கள் 5 ஆயிரம் அமைக்கப்படும். தாழ்வான பகுதிகளில் சாலை ஓரங்களில் போக்குவரத்து தீவு, சாலையோர பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், சுகாதாரத்துறை கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சீரமைக்கப்படும். இல்லாத இடங்களில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

தனியார் கட்டிட வளாகம், வணிக வளாகம், திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத இடங்களில் புதிதாக அமைப்புகள் ஏற்படுத்த வலியுறுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமும் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும்போது மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் வரைபடத்துடன் இருந்தால்தான் அனுமதி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியின் வருவாய்த்துறை ஊழியர்களான வரி மதிப்பீட்டாளர்கள், வரி தண்டலர்கள் சென்னை நகரில் உள்ள  புதிய கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே கட்டிடங்களுக்கு வரி மதிப்பீடு செய்யப்படும்.

மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே கட்டுமானங்களுக்கு கழிவுநீர் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். அல்லது மழை நீர் அமைப்பை ஏற்படுத்திய பிறகே அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.