Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுமா

Print PDF
தின மணி          18.02.2013

தேனியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுமா

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் உள்ள குடிநீர் திட்டம், பழனிசெட்டிபட்டி குடிநீர் திட்டம், வீரப்பஅய்யனார் மலை குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், பழனிசெட்டிபட்டி குடிநீர் திட்டம் மூலம் பம்பிங் செய்யப்படும் நீர் அங்கேயே சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் தேக்கி குடிநீர் குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குன்னூர் வைகை ஆறு, வீரப்பஅய்யனார் மலை குடிநீர் திட்டங்களில் இருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர், சுத்திகரிக்கப்படாமல் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் தேக்கி, குளோரினேசன் செய்யப்பட்டு குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் முறையாக குளோரினேசன் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ரசாயன கலவையை தண்ணீரில் குறிப்பிட்ட அளவில் இட்டு கரையச் செய்யாமல், மூடையை திறந்து அப்படியே மேல்நிலைத் தொட்டிக்குள் கொட்டுவதால், சில நேரங்களில் குழாய்களில் குடிநீர் ரசாயன வாசனையுடன் வருவதாகவும், மேல்நிலைத் தொட்டிக்குள் போடப்படும் சாக்குப் பை, மட்கி தண்ணீருடன் கலந்து வந்து குழாய்களில் சிக்குவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறுகிய தெருக்களில் சாக்கடையோரத்தில் குடிநீர் பகிர்மான குழாகள் பதிக்கப்பட்டுள்ளதால், குடிநீரில் குழாயில் கசிவு ஏற்படும்போது சாக்கடை நீர் கலக்கும் அபாயம் உள்ளது.

பொதுக் குழாய் அவலம்: நகராட்சி எல்லைக்குள் பெரும்பாலான இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக் குடிநீர்  குழாயை சுற்றிலும் தண்ணீர் தேங்காத வகையில் சிமெண்ட் மேடை அமைக்கப்படுவதில்லை. சாக்கடையை ஒட்டியுள்ள பகுதியில் பொது குழாய் அமைக்கப்படுவதால், தண்ணீர் மற்றும் கழிவு நீர் கலந்து பொதுக் குழாய் அமைந்துள்ள பகுதி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில், மூடி வைக்கப்படாமல் உள்ள குடிநீர் வால்வு தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் எடுத்துச் சென்று பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் மூலம் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் நிலையில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் திட்டம் மற்றும் சுகாதார அலுவலர்கள் முன்னிலையில் குடிநீரை முறையாக சுத்திகரித்து விநியோகம் செய்யவும், சாக்கடையை ஒட்டிய பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதை தவிர்க்கவும், பொது குடிநீர் குழாய்களை பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறியது: வைகை அணை அருகே அமையவுள்ள புதிய குடிநீர் திட்டத்தில் சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொறுத்தி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
Last Updated on Monday, 18 February 2013 09:01