Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: தஞ்சாவூர் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF
தினமணி           01.03.2013

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்:  தஞ்சாவூர் நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை நகரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் தலைமை வகித்தார்.

எஸ். சதாசிவம் (திமுக): நாள்தோறும் காலை 5 மணிக்கு மின் தடை செய்யப்படுவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதனால், அரை மணி நேரம் கூட வீடுகளுக்குக் குடிநீர் கிடைப்பதில்லை.

சண். ராமநாதன் (திமுக): நகரில் உள்ள 51 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. மருத்துவக் கல்லூரி சாலை விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிகமாக அதிகமாக இருக்கிறது. இந்தப் பாதிப்பு குறித்தும், அதனால், புதிய குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகவும் கடந்த கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டது. இப்போதே குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் கோடைகாலத்தில் இன்னும் அதிகமாகும். இதை நகராட்சி நிர்வாகம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது.

நகராட்சிப் பொறியாளர் சீனிவாசன்: வெண்ணாற்றில் கோடைகாலத்தில் தண்ணீர் வரத்து இருக்காது என்பதால் 10 மில்லியன் லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுக்க முடியாது என குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகின்றனர். எனவே, புதிய திட்டம் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. அதனால்தான் புதிய குடிநீர் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அடுத்தக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

ஜி. பிரகாஷ் (திமுக): புதை சாக்கடைகளில் அதிக அளவில் மண் படிந்துள்ளதால், கழிவு நீரோட்டத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

தலைவர்: துப்புரவு பணிக்கு 180 பேர் வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டுள்ளது. இப்போது, 150 பேர் பணிக்கு அனுப்புகிறார். 180 பேர் அனுப்பும்போது அவர்களில் 30 பேரை சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீர்செய்ய பயன்படுத்தப்படும். இரு நாள்களுக்குள் 180 பேரை அனுப்புவதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். அனுப்பவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

எஸ். சண்முகபிரபு (அதிமுக): நிலுவையில் உள்ள தொழில் வரி ரூ. 4.33 லட்சத்தை வசூலிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றை நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையிலேயே தொழில் வரி செலுத்த இயலாதவர்களுக்குத் தள்ளுபடி செய்வது நியாயமானது. ஆனால், அந்தப் பட்டியலில் வருமான வரி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். எனவே, வருமான வரி செலுத்துபவர்களால் தொழில் வரி செலுத்த முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஆணையர் என். ரவிச்சந்திரன்: இந்தத் தீர்மானம் தொடர்பாக மறு ஆய்வு செய்து பின்னர் மன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்படும்.

துணைத் தலைவர் கே. மணிகண்டன்: சரபோஜி சந்தையில் கடை ஏலம் விடப்பட்ட பிரச்னையில் தவறு செய்தது அலுவலர்கள்தான். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர்: நிர்வாகத் தரப்பில் தவறு நிகழ்ந்துள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
Last Updated on Friday, 01 March 2013 10:13