Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏர்வாடியில் 10 நாட்களாக காவிரி குடிநீர் நிறுத்தம் லாரி தண்ணீர் குடம் ரூ.5க்கு விற்பனை

Print PDF
தினமலர்                       04.03.2013

ஏர்வாடியில் 10 நாட்களாக காவிரி குடிநீர் நிறுத்தம் லாரி தண்ணீர் குடம் ரூ.5க்கு விற்பனை


கீழக்கரை: ஏர்வாடியில் கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் லாரி குடிநீரை ஒரு குடம் ரூ. 5க்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பற்றாக்குறை காரணமாக, குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் விவசாயம், கூலிவேலை, கட்டுமான தொழில் உள்ளிட்ட வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டதால் மக்கள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர். காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் சப்ளை செய்யப்படுவதால் தண்ணீர் வரும்போது, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு குடங்களில் சேமித்து வைப்பதில் மும்முரம் காட்டுவர்.

சிக்கலில் உள்ள காவிரி குடிநீர் சேகரிப்பு மையத்தில் இருந்து ஏர்வாடி ஊராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாக ஏர்வாடியில் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அன்றாட தேவை போக, குளிப்பதற்கும் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியே காத்திருக்கும் அவலம் உள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு விற்கப்படுகிறது. ஏர்வாடி அஸ்மா பீவி, 54. கூறியதாவது:நான்கு ரூபாய்க்கு விற்ற ஒரு குடம் தண்ணீர், டீசல் விலை உயர்வால் தற்போது ஐந்து ரூபாயாக உயர்ந்துள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு ஒரு குடும்பத்தை பொறுத்தவரை ஐந்து குடம் தண்ணீர் தேவை உள்ளது. கூலி வேலை செய்யும் எங்களால் தண்ணீருக்கு தினமும் 25 ரூபாய் எப்படி செலவழிக்க முடியும். எனவே, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் அவசியம் கருதி டிராக்டர் மூலம் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க முன்வர வேண்டும்.ஊராட்சி தலைவர் முகம்மது அலி ஜின்னா கூறியதாவது;இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து குடிநீர் வினியோகம் தடைபட்டதால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளோம். காவிரி நீர் வாரத்திற்கு அதிகபட்சமாக மூன்று முறை தான் வினியோகம் செய்கின்றனர். இது மக்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறையாக இருந்து வருகிறது, என்றார்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இளநிலை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

சிக்கலில் உள்ள "பம்பிங் ஸ்டேஷனில்' மின்மோட்டர் பழுதால், குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், நேற்று முன்தினம் மோட்டார் பழுது நீக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில், ஏர்வாடி பகுதியில் குடிநீர் வந்துவிடும்.
Last Updated on Monday, 04 March 2013 11:10