Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடையை சமாளிக்க புதிய குடிநீர் திட்டம்நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் "யோசனை'

Print PDF
தினமலர்          04.03.2013

கோடையை சமாளிக்க புதிய குடிநீர் திட்டம்நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் "யோசனை'


தஞ்சாவூர்: "கோடைகாலத்தை சமாளிக்க புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்' என, தஞ்சை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.தஞ்சையில் நகராட்சி கூட்டம் தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்தது. இதில், கமிஷனர் ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் சிவனேசன், இன்ஜினியர் சீனிவாசன் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:சதாசிவம் (தி.மு.க.,): நகராட்சி பகுதியில், குண்டும் குழியுமாக சாலை காட்சியளிக்கிறது. இதை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதன் (தி.மு.க.,): கோடை காலம் நெருங்கி வருகிறது.

ஆனால், தற்போதே, நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே பற்றாக்குறையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக, புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, போதிய குடிநீரை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியாருக்கு துப்புரவு பணி விடப்பட்டு, 180 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவர் என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 150 பேர் தான் ஈடுபடுகின்றனர். மேலும் வழக்கமாக, 30 பேர் தனியாக பிரிக்கப்பட்டு, சாக்கடை அடைப்பு மண்ணை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இப்பணிக்கு, 30 பேர் ஒதுக்காததால் சாக்கடை அடைப்பு, சுகாதாரக்கேடு அதிகரித்து விட்டது.இன்ஜினியர்: வெண்ணாற்றங்கரை படுகையில், குடிநீர் எடுக்க, 11 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் கோடையில் இத்திட்டம் மூலம் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், மாற்றுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும்.சாவித்திரி (தலைவர்): துப்புரவு பணிக்காக, 180 பேர் தனியாரிடம் கோரப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, 170 பேர் வரை வருகின்றனர். ஒப்பந்தபடி, 180 பேரை ஒதுக்காவிட்டால், மறுடெண்டர் வைக்கப்பட்டு, வேறு நபரிடம் பணிகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை மண் அள்ளவும் தனியாக தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர்.மதியழகன் (அ.தி.மு.க.,): வெண்ணாற்றங்கரையில் புதிய பாலம் அமைக்க, தி.மு.க., ஆட்சியில் பழைய பாலம் இடிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பாலம் திறப்பு விழா கண்டுள்ளது.

இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.,): வார்டுதோறும் உள்ள குறைகளை நேரில் நகராட்சி தலைவர் ஆய்வு செய்து, பணிகளை முடுக்கி விட வேண்டும்.இதற்கு தலைவர் சாவித்திரி, நேரில் பார்க்கவேண்டும் எனும் அவசியம் இல்லாத அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது என கூறினார். அதற்கு கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் மறுத்து, பொதுவாகவே, ஒருவரை வீட்டுக்கு வாங்க, சாப்பிடுங்க என, கூறுவோம்.

ஆனால் வாயளவு கூறிவிட்டு, சாப்பாடு போடமாட்டோம். அதுபோல தான் இதுவும். ஆய்வுக்கு வந்தால், குறைகளை நேரடியாக கூற வசதியாக இருக்கும் என, நகைச்சுவையாக கூற, கூட்டத்தில் அனைவரும் சிரித்ததால், கலகலப்பு ஏற்பட்டது.
Last Updated on Monday, 04 March 2013 11:13