Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணியில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு! * வறட்சியை சமாளிக்க முன்னேற்பாடு

Print PDF
தினமலர்                  07.03.2013

சிறுவாணியில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு! * வறட்சியை சமாளிக்க முன்னேற்பாடு


சிறுவாணி அணையில் நீர்இருப்பு குறைந்து வருவதால், தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டு, வறட்சியை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் 32 வார்டுகள்; சாடிவயல், காருண்யா நகர், செம்மேடு, போளுவாம்பட்டி, பூளுவப்பட்டி, ஆலாந்துறை, மாதம்பட்டி, காளம்பாளையம், பேரூர் பகுதிகள், தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கோவைபுதூர், கவுண்டம்பாளையம், குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கும் சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது.

இதையடுத்து, சிறுவாணியில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைந்ததால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மாநகராட்சியில் ஐந்து இடங்களில் சிறுவாணி - பில்லூர் குடிநீர் குழாய்கள் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வேலாண்டிபாளையம், வெங்கிட்டாபுரம், கவுண்டம்பாளையம், பி.என்.புதூர், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள 12 வார்டுகள் சிறுவாணி குடிநீரை மட்டுமே நம்பியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, 15 மீட்டர் உயரமுள்ள சிறுவாணி அணையில் 0.56 மீட்டர் (அதாவது, 1.83 அடி) நீர்மட்டம் உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து, நீர் எடுக்கும் அளவும் குறைந்ததால், வினியோகிக்கப்படும் தண்ணீர் "பிரஷர்' குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்பதால், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், "சிறுவாணியில் நீர் இருப்பு குறைந்துள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவை குறைக்க ஆலோசனை செய்யப்பட்டது. மாநகராட்சிக்கு வழங்கும் சிறுவாணி தண்ணீர் அளவை குறைத்தால், மே மாதம் 10ம் தேதி வரையிலும் சிறுவாணியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். அதற்குள், மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சிறுவாணி மலைப்பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவாணி குடிநீர் வழங்க வேண்டிய வார்டுகளில் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் பில்லூர் தண்ணீர் சப்ளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சூழலை அறிந்து மக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்றார்.