Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் எடுப்பதில் பாதிப்பு சிறுவாணி அணையில் திடீர் நிலச்சரிவு

Print PDF
தினகரன்               16.03.2013

குடிநீர் எடுப்பதில் பாதிப்பு சிறுவாணி அணையில் திடீர் நிலச்சரிவு


கோவை: சிறுவாணி அணையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் உறிஞ்சி எடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணையின் நீர்த்தேக்க பரப்பு 22.46 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர். அணை நீர்மட்டம் தரையை எட்டி விட்டது. ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய நீரை வாய்க்கால் வெட்டி நீரேற்று நிலையம் கொண்டு வந்து குடிநீரை உறிஞ்சி பெற முடியும். நீரேற்று நிலையத்தில் நேற்று முன் தினம் நீரை உறிஞ்சியபோது அணையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அணை நீர்தேக்கத்தில் சுமார் 100 டன் மண் மற்றும் 6 மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் குடிநீரை உறிஞ்சி, சுத்திகரித்து வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மண் குவியலை அகற்றி நீர் வரும் வகையில் வாய்க்கால் அமைத்தனர். இதை தொடர்ந்து குடிநீர் தடையின்றி வினியோகம் செய்யப்பட்டது. அணையின் நீர் தேக்கத்தில் உள்ள குட்டையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால் அணையில் உள்ள வண்டல் மண் காய்ந்து வெடிப்புடன் காணப்படுகிறது. வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ள மண் ஸ்திர தன்மையை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அணை நீர்த்தேக்க பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர். அணையின் நீர்த்தேக்கத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மண் சரியும் போது கரையோரம் உள்ள மரம், செடிகளும் நீர்த்தேக்கத்தில் விழுந்து விடும் வாய்ப்புள்ளது. வறட்சி அதிகமாகும்போது அணையின் நீர்த்தேக்க பகுதியில் மண் சரிவு அதிகமாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மண் சரிவு அபாயம் உள்ள பகுதியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும். குட்டை போல் தேங்கியுள்ள நீரை வாய்க்கால் அமைத்து நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரவேண்டும். இதற்கு கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை ஒப்புதல் வழங்கவேண்டும் என கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெத் ஸ்டோரேஜில் குடிநீர்!

அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். கடல் மட்ட உயர அளவின் படி பார்த்தால் அணையின் உச்ச மட்டம் 878.50 மீட்டராகவும், தரை மட்டம் 863.50 மீட்டராகவும் உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 863.52 மீட்டராக இருந்தது. அணையில் 863.50 மீட்டர் வரை மட்டுமே குடிநீர் பெற முடியும். அதற்கு கீழே உள்ள குடிநீர் இறுதி கட்ட இருப்பாக (டெத் ஸ்டோரேஜ்) கருதப்படுகிறது. இந்த குடிநீர் வன விலங்குகளுக்கும், அணையின் பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது அணையின் 3..5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இன்று முதல் 3 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே பெற முடியும்.