Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னை: ஒரே நாளில் 150 தொலைபேசி அழைப்புகள்

Print PDF
தினமணி           22.03.2013

குடிநீர் பிரச்னை: ஒரே நாளில் 150 தொலைபேசி அழைப்புகள்


மதுரை நகரில் குடிநீர் பிரச்னை தொடர்பான சிறப்புப் பிரிவுக்கு வியாழக்கிழமை மட்டும் 150 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி இல்லாத வகையில் செயல்படுவது குறித்த மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னிலை வகித்த மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் பேசியதாவது:

மதுரை மாநகரப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு தற்போது உருவாகி வருகிறது. அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் உள்ளது. தற்போதைய சூழலில் குடிநீர் பிரச்னை தொடராமல் தவிர்க்க மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது:

நகரில் தற்போதைய சூழலில் குடிநீர்த் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. மேலும், ஏற்கெனவே பல்வேறு தவறுகள் மூலமும், அனுமதியின்றி குழாய் இணைப்புகள்  வழங்கப்பட்டதாலும், நடைமுறைச் சிக்கல்களாலும், சில இடங்களில் பாதாளச்சாக்கடை அருகிலேயே குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டதாலும், குடிநீரில் கழிவு நீர் கலந்து விநியோகம் ஆன சூழல் உள்ளது.

மேடான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் உள்ளது. ஒட்டுமொத்தமாக மாநகரில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் நிரந்தரத் தீர்வுகாண வைகை அணையில்  இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தண்ணீர் திறப்புக்கு ஒத்துழைப்புத் தராததால், தண்ணீர் திறக்கப்படவில்லை.

இயற்கை பொய்த்து வருவதால் வைகை அணை உள்ளிட்ட நீராதாரங்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. பல இடங்களில் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. எதிர்காலத்தில் குடிநீர் பிரச்னை தலைதூக்கினால் அவற்றை சமாளிக்க மாநகரைச் சுற்றி 15 கி.மீ. சுற்றளவில் உள்ள குடிநீர் ஆதாரங்களை அடையாளம் கண்டுள்ளோம். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் நீராதாரங்கள் மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

எனது சிறப்புப் பிரிவில் குடிநீர் விநியோகக் குறைபாடுகள் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிக்கு வியாழக்கிழமை மட்டும் 150 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 15 வார்டுகளில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.    அப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாணுமாறு பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் 100 வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தில் குறைபாடு இல்லாத வகையிலும், பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாத வகையிலும்  செயல்பட வேண்டியுள்ளது.

இதற்கு அந்தந்த வார்டுகளில் குடிநீர் தொடர்பான பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், மாமன்ற உறுப்பினர்களும், பொறியாளர்களும் ஒருங்கிணைந்து  செயல்பட்டு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும் என்றார்.   பொதுமக்கள் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மேயரின் சிறப்புப் பிரிவுக்குப் பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறப்பட்டது.