Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

23 ஆண்டுகளுக்கு பிறகு கூடலூர் குடிநீர் திட்ட தடுப்பணை சீரமைப்பு

Print PDF

தினத்தந்தி                22.03.2013

23 ஆண்டுகளுக்கு பிறகு கூடலூர் குடிநீர் திட்ட தடுப்பணை சீரமைப்பு

23 ஆண்டுகளுக்கு பிறகு கூடலூர் ஹெலன் குடிநீர் திட்ட தடுப்பணை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடுக்கு தீர்வு ஏற்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு

கூடலூர் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ள நிலையில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கூடலூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது. இதனால் ஓவேலி ஹெலன் பகுதியில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

கடந்த 1989– 1990–ம் ஆண்டில் ஓவேலி ஆத்தூர் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டன.அங்கிருந்து குழாய் மூலம் கூடலூர் நகருக்கு குடிநீர் இதுவரை கொண்டு செல்லப் பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டு தோறும் கோடை காலத்தின்போது குடிநீர் பிரச்சினை விசுவரூபம் எடுக்கும். இதன் காரணமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

23 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைப்பு

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் பிரச்சினை எழும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் ஓவேலி ஆத்தூர் பகுதியில் உள்ள குடிநீர் திட்ட தடுப்பணை பல ஆண்டுகளாக உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருந்தன. இதன் காரணமாக கூடலூர் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்வதிலும் பிரச்சினை எழுந்தது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்லும் இடம் என்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது கோடை காலம் நிலவுவதால் தடுப்பணையில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.

இதையொட்டி கூடலூர் நகராட்சி கமிஷனர் மணி உத்தர வின் பேரில்  ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கூடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடிய ஓவேலி ஆத்தூர் தடுப்பணையை சீரமைக்கும் பணி கடந்த 5 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணியில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், குடிநீர் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

இதுகுறித்து கூடலூர் நகராட்சி கமிஷனர் மணி, பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:– கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு ஓவேலி ஆத்தூர் தடுப்பணையை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் பணிகள் மேற்கொள்ள முடியாது. மேலும் தடுப்பணையை சீரமைத்து உள்ளதால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்து விடும். அதுவரை குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு நகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதனை பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.