Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆட்சியர் உத்தரவு

Print PDF
தினமணி         26.03.2013

குடிநீர்த் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆட்சியர் உத்தரவு


குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க ஆழ்துளை கிணறுகளை கூடுதலாக  அமைக்கவும், நீராதாரம் குறைவாக உள்ள பகுதிகளில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, ஆட்சியர்  அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள  தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

மதுரை மாநகராட்சியில் எந்தெந்த வார்டுகளில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக  உள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்த வார்டுகளில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன என்பதையும் கணக்கிட்டு, அதற்கேற்ப கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க  வேண்டும். நீராதாரம் குறைவான பகுதிகளில் தேவைக்கேற்ப சுழற்சி முறையில் லாரிகளில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், நீராதாரம் குறைவான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை தேவைக்கேற்ப ஆழப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு உள்ளாட்சி துறையிலுள்ள பொதுநிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குடிநீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையத்தை  0452-2526888, 2521444, என்ற தொலைபேசி எண்களிலும், 7200650582 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் 0452-2530433 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வருகிறதோ அப் பகுதிக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி வார்டுகளிலும், ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொருத்தப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களின் பீலியை சரியாக மூடாததாலும்,  உடைத்து விடுவதாலும், குடிநீர் அதிக அளவில் வீணாகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.   நிலத்தடி நீரை வியாபார நோக்கில் விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் சில பகுதிகளிலும்,  மாவட்டத்தின் சில பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையை சரிசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  குடிநீர் இணைப்புகளில் மோட்டார் அமைத்து குடிநீரை உறிஞ்சினால்,  மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும். கோடை காலமாக இருப்பதால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  பொதுமக்களும் இதனை உணர்ந்து நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்  ஆட்சியர்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்சுந்தர்தயாளன், மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சாந்தி, பொதுப்பணித் துறை  செயற்பொறியாளர் தனபால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  சுகுமாறன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள்  பங்கேற்றனர்.