Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு 11 வார்டுகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்

Print PDF
தினகரன்        26.03.2013

குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு 11 வார்டுகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்


கோவை: குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் 11 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மேயர் கூறினார்.

கோவை மாநகரில் சிறுவாணி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் லதா முன்னிலைவகித்தார். இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மேயர் கூறியதாவது:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 15, 18, 19, 20, 21 வார்டுகள், தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 76, 77, 78, 79, 89, 90 வார்டுகள் என மொத்தம் 11 வார்டுகள் சிறுவாணி குடிநீரை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளன. இப்பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் கொண்டுசெல்ல இணைப்பு குழாய்கள் பொருத்தப்படவில்லை.

கோடை காலமாக இருப்பதால் இப்பகுதிகளுக்கு சிறுவாணி குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்படுவதால் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. எனவே, குடிநீரை சேமிக்கும் வகையில் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடிநீரை எல்லா பகுதி மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் வகையில் தேவையான இடங்களில் கூடுதல் வால்வுகள் பொருத்தப்படும். ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து இருந்தால் அதை உடனடியாக சீரமைக்கவும், தேவைப்பட்டால் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

கூட்டத்தில், துணை கமிஷனர் சிவராசு, துணை மேயர் லீலாவதி, மாநகர பொறியாளர் கருணாகரன், மண்டல தலைவர்கள் பெருமாள்சாமி, சாவித்ரி, பணிக்குழு தலைவர் அம்மன் அர்ஜூணன் உள்பட பலர் பங்கேற்றனர்.