Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அதிகாரிகளின் குடிநீர் வினியோக தகவலில்... முரண்பாடு ராமநாதபுரத்தில் தட்டுப்பாடு ஆரம்பம்

Print PDF
தினமலர்        26.03.2013

அதிகாரிகளின் குடிநீர் வினியோக தகவலில்... முரண்பாடு ராமநாதபுரத்தில் தட்டுப்பாடு ஆரம்பம்


ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படும் அளவீடுகளில், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை தெரிவிக்கின்றனர். ஆனால் சப்ளையில் பெரும் குளறுபடி நிலவுகிறது. சில பகுதிகளுக்கு பல நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளதை, கண்டுகொள்ளப்படாமல் உள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் அதிகரித்துள்ள மின்வெட்டால், குடிநீர் சப்ளையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது வார்டில் வடக்கு தெரு மற்றும் மதுரை ரோட்டில் உள்ள பகுதிகளில், 15 தினங்களுக்கும் மேலாக குடிநீர் வராததால், மக்கள் லாரி தண்ணீரை எதிர்பார்த்துள்ளனர்.குடிநீர் சரியாக வராதது குறித்து புகார் தெரிவித்தால், நகராட்சியினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் மீதும், குடிநீர் வடிகால் வாரியத்தினர், நகராட்சி மீதும் குறை கூறுகின்றனர்.

ராமநாதபுரம் குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர் கூறியதாவது:

ராமநாதபுரம் நகராட்சிக்கு முன்பு தினமும், 34 லட்சம் லிட்டர் குடிநீரை, மேல்நிலை தொட்டியில் ஏற்றினோம். தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக, தினமும் 30 லட்சம் லிட்டர் வழங்குகிறோம். குடிநீர் வினியோகம் நகராட்சியின் பணி என்பதால் அதில் ஏற்படும் தவறு குறித்து தெரியாது, என்றார்.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சில நாட்களாக, 28 லட்சம் லிட்டரை தான், வடிகால் வாரியம் சப்ளை செய்கிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் அதிகமாக இருப்பதால், சப்ளையில் போதிய அழுத்தம் இன்றி, சில பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில்லை. இரண்டாவது வார்டு மேடான பகுதி. அங்கு விரைவில் புதிய குழாய் அமைக்கப்படும். ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை குடியிருப்பு பகுதிகளில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.