Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வறண்ட வரட்டாறு அணையால் அரூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Print PDF
தினமலர்       28.03.2013

வறண்ட வரட்டாறு அணையால் அரூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை தண்ணீரின்றி வறண்டு போனதால், அரூர் நகரப்பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரூர் அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணை கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு கீழ் அமைந்துள்ளது. இந்த அணைக்கு சித்தேரி மலைப்பகுதியிலிருந்து நீர்வரத்து வருகிறது. அணை மூலம், 25 ஏரிகள் நிரம்புகிறது. மேலும், 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும், அரூர் நகருக்கு வரட்டாறு அணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, மூன்று நாட்களுக்கு ஒருமுறை அரூர் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு மாதத்துக்கு முன் வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மொத்தம், 110 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது. 3.34 மில்லியன் கன அடி நீர் மட்டும் இருப்பு உள்ளது.

தற்போது நிலவும் கடும் வறட்சியால், அணையில் நீர் இருப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் அணைக்கு நீர்வரத்தும் இல்லை. இதனால் அரூர் நகருக்கு குடிநீர் ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கட்டு செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ""அரூர் நகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைக்கட்டில் போதுமான அளவு நீர் இருப்பு, 3.34 மில்லியன் கன அடி உள்ளது. இதனை கொண்டு இரண்டு மாதங்களுக்கு அரூர் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்னை இருக்காது,'' என்றார்.