Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூரில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்

Print PDF
தினமலர்       28.03.2013

குன்னூரில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்


குன்னூர்:குன்னூரில் மழை பொய்த்ததால் தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு இந்த அணையிலிருந்து தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு தென் மேற்கு பருவ மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், அணை முற்றிலும் வறண்டது. நவம்பர் மாதம் புயல் காரணமாக கன மழை பெய்து அணை நிரம்பியது. தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், அணைக்கான நீர் வரத்து குறைந்து அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையிலிருந்து நீர் சிம்ஸ் பார்க் சேமிப்பு தொட்டியில் நிரப்பபட்டு, அங்கிருந்து ஜிம்கானா நீர் தேக்கத்துக்கு பம்ப் செய்யப்படும். இந்நிலையில், ஜிம்கானா நீர் தேக்கத்தில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது.

கசிவை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால், இந்த தடுப்பணை கட்டப்பட்டு சிறிது காலத்திலேயே உடைந்ததால், தற்போது மீண்டும் தடுப்பணை கட்டும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ரேலியா அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால், தண்ணீர் வினியோகிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் காலை 4:00 மணி நேரமும், மதியம் 4:00 மணி நேரமும் தண்ணீர் பம்ப் செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால்,"நகர் பகுதிகளில் வாரத்துக்கு ஒரு முறை வினியோகிக்கப்பட்டு வந்த தண்ணீர், தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது' என உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.