Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெம்மேலி கடல் குடிநீர்: தென்சென்னையில் விநியோகம் தொடக்கம்

Print PDF
தினமணி              31.03.2013

நெம்மேலி கடல் குடிநீர்: தென்சென்னையில் விநியோகம் தொடக்கம்


நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மீஞ்சூரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் ரூ.871 கோடி செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக 64.37 கிலோ மீட்டருக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம் செய்யப்படும் பிரதானக் குழாய்களை சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தென்சென்னை பகுதிக்கு நெம்மேலி கடல் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், இந்திரா நகர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, தரமணி, பெருங்குடியில் ஒரு பகுதி, கொட்டிவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் சில நாள்களுக்குள் நெம்மேலியிலிருந்து பெறப்படும் 10 கோடி லிட்டர் குடிநீரும் முழுமையாக விநியோகிகப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் மூலம் தற்போது 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் ஏரிகளிலிருந்து பெறப்படும் 83 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.