Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏற்பாடு

Print PDF
தினமணி        01.04.2013

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏற்பாடு

அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

அரியலூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைபம்பு அமைத்தல், வாடகை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகித்தல், பழுதான கைபம்புகள் பராமரித்தல், தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்துள்ள மின் மோட்டார்களுக்குப் பதிலாக புதிய மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர் அமைக்க ரூ. 1 கோடியே 16 லட்சம், திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறையை சீரமைக்க 2 ஆழ்துளை கிணறுகள் ரூ. 5 லட்சத்தில் அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும், ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய கைபம்பு அமைத்தல் பணிக்கு ரூ. 5 லட்சம், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 18 லட்சம், 10 ஆழ்துளை கிணறுகளை சுத்தம் செய்ய ரூ. 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரியலூர் நகராட்சி 5-வது வார்டு கே.கே. காலனியில் ஆழ்துளைக் கிணறுகளை சுத்தம் செய்யும் பணி 23-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

2-ம் கட்டமாக ஆழ்துளை கிணற்றுடன் கூடிய கைபம்பு அமைக்கும் பணி அரியலூர் பெரிய தெருவில் சனிக்கிழமை தொடங்கியது. நகர்மன்றத் தலைவர் முருகேசன் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தார்.

ஆணையர் சரஸ்வதி, நகராட்சி உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரியலூர் நகராட்சியில் உள்ள 10, 18 மற்றும் 13 -வது வார்டுகளில் தலா ஒரு ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய கைபம்பு அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ரூ. 5 லட்சத்தில் 4 இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.