Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"கோடை தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' திட்டக்குழு கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

Print PDF
தினமலர்              02.04.2013

"கோடை தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' திட்டக்குழு கூட்டத்தில் ஆட்சியர் தகவல்


திருவள்ளூர்:""கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, திட்டக்குழு கூட்டத்தில் ஆட்சியர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவருமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

திருவள்ளூர் தொகுதி எம்.பி.வேணுகோபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் வீர ராகவ ராவ் கூட்டத்தை துவங்கி வைத்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

காட்டுப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில் இருந்து, மின்சார எரிமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி தற்போது, எந்த நிலையில் உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

திருவள்ளூர் நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக, நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு, வரைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து ஆட்சியர் கூறியதாவது:

உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளிலும் சாலை மேம்பாட்டு பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம் சீரமைக்கும் பணியும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், குடியிருப்புகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் வசதி செய்து கொடுக்கப்படும். மாவட்டத்தில் வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.