Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காவிரியில் 5 ஆழ்குழாய், மாநகரில் 50 ஆழ்குழாய் கிணறுகள்

Print PDF
தினமணி       04.04.2013

காவிரியில் 5 ஆழ்குழாய், மாநகரில் 50 ஆழ்குழாய் கிணறுகள்

கோடைகாலத்தில் திருச்சி மாநகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், காவிரியில் 5 புதிய ஆழ்குழாய் கிணறுகள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ள காவிரியாற்றில் ரூ. 55 லட்சத்தில் 5 புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியை மேயர் அ. ஜெயா புதன்கிழமை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திருச்சி மாநகராட்சியில் கோடைகாலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ. 3.59 கோடியை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதன்மூலம் காவிரியாற்றில் 60 அடி ஆழத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அம்க்கப்பட்டு வருகின்றன. இதற்காக புதிய மின்மோட்டார், இணைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தலா ரூ. 40 ஆயிரத்தில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 50 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. 10 இடங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பவர் பம்புகள் அமைக்கப்படுகின்றன.

மின்தட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு 5 புதிய ஜெனரேட்டர்கள் ரூ. 1.18 கோடியில் வாங்கப்படுகின்றன. மேலும், 11 லாரிகள் ஏற்கெனவே குடிநீர் விநியோகத்துக்காக பயன்பட்டு வரும் நிலையில், மேலும் 4 லாரிகள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் ஜெயா.

ஆய்வின்போது கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், ஆர். ஞானசேகர், எம். லதா, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கோ-அபிஷேகபுரம் கோட்டம் 54-வது வார்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதையும் மேயர் ஆய்வு செய்தார்.