Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது: சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Print PDF

தினத்தந்தி        04.04.2013

மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது: சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 

மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளதால் சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடை மழை கை கொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேட்டூர் அணை

பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934–ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல இந்த 16 மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்போது, வழித்தடங்களில் இருக்கும் மாவட்டங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும் காவிரி ஆறு நிரப்பிச்செல்கிறது. இதன்மூலம் அந்த பகுதியின் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயருகிறது.

குடிநீர் திட்டங்கள்

இதற்கிடையே, மேட்டூர் அணையை நம்பி இந்த 11 மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு குடிநீர் திட்டங்களும் பயன்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பி.என்.பட்டி–வீரக்கல்புதூர் கூட்டுக்குடிநீர் திட்டம், கொளத்தூர் பேரூராட்சி குடிநீர் திட்டம், சேலம்–ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மேட்டூர் அணையை நம்பி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி குடிநீர் திட்டம் மற்றும் மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர்

இதுமட்டுமின்றி தமிழக–கர்நாடக எல்லைப்பகுதியான அடிபாலாறு என்ற இடத்தில் அணையின் நீர்த்தேக்கப்பரப்பில் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு குடிநீர் எடுத்துச்செல்வதற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து விட்டது. மேலும், மேட்டூர் அனல் மின்நிலையம் உள்பட நகரை சுற்றி உள்ள தனியார் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்துதான் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

பருவமழை பொய்த்தது

இந்நிலையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும், பருவமழையை எதிர்நோக்கி கடந்த செப்டம்பர் மாதம் 17–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஏற்கனவே, நீர்வரத்து இல்லாததால் குறைந்துபோன மேட்டூர் அணையின் நீர்மட்டம், இந்த தண்ணீர் திறப்பின் காரணமாக மேலும் குறைந்து வந்தது. அதாவது, 50 அடியில் இருந்து படிப்படியாக குறைந்து வந்த நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 26.89 அடியாக சரிந்தது. அதாவது, அணையில் தற்போது 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரிக்கும் அனல் பறக்கிறது. எனவே, அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதம் வரை மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இதனால் வறட்சியை எதிர்நோக்கும் நிலையும், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையை போக்க கோடைமழை கை கொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Last Updated on Friday, 05 April 2013 10:36