Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ 40 லட்சத்தில் பணிகள்

Print PDF

தினமணி                  09.04.2013

பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ 40 லட்சத்தில் பணிகள்


பரமக்குடி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த காவிரி கூட்டுக் குடிநீரின் அளவு வறட்சியால் குறைவாக கிடைப்பதால் அதை ஈடுசெய்யும் வகையில் கள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள நீர் ஊறிஞ்சும் கிணறு மற்றும் குடிநீர் குழாய் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா ஊழியர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பரமக்குடி நகருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 59 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் அங்குள்ள கிணறுகள் வறட்சியால் நீர் ஊற்று குறைந்துள்ளது.

இதனால் பரமக்குடி நகருக்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மேலும் நகராட்சி பகுதிக்கு குடிநீர் எடுத்த கள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள 6 நீர் உறிஞ்சு கிணறுகளில் 3 ஏற்கெனவே பழுதடைந்துள்ளன.

நகர் மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கிட பழுதடைந்த 3 கிணறுகளை சரி செய்திடவும், மின்தடையின்போது தடையின்றி குடிநீர் எடுக்க 50 கே.வி.யுடன் இயங்கக்கூடிய ஜெனரேட்டர் பொருத்திடவும், காட்டுப்பரமக்குடி தோப்பு பகுதியில் புதிதாக ஆழ்குழாய் அமைத்து அங்கிருந்து குடிநீர் விநியோகம்  செய்திடவும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு கெவி மெட்டலால் தயாரிக்கப்பட்ட குழாய்கள் பொருத்துவது உள்பட அனைத்து பணிகளும் ரூ.40 லட்சம் மதிப்பில் உடனே மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு உடனே தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கே.அட்ஷயா, பொறியாளர் ஜி.தங்கப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஏ.முனியசாமி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.