Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் நகராட்சியில் பம்ப்செட் மூலம் குடிநீர்... திருட்டு மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

Print PDF
தினமலர்        09.04.2013

ராமநாதபுரம் நகராட்சியில் பம்ப்செட் மூலம் குடிநீர்... திருட்டு மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சியில் பம்ப்செட் மூலம் குடிநீர் திருடுவதால், மற்ற வார்டுகளில் குடிநீர் சப்ளை இன்றி, மக்கள் காலி குடங்குடன் குழாயடியில் காத்திருக்கும் பரிதாபம் நீடித்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் 30 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

4,100 வீட்டு இணைப்புகள் உள்ளன. தவிர, 110 தெருக்குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மாதந்தோறும் 100, வணிக நிறுவனங்கள்(கடை) 200 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர்.சில வார்டுகளில் குடிநீர் பிரச்னை தலை தூக்கியுள்ளது. அண்ணாநகர், சேதுபதிநகர், சாயக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சீராக வருவதில்லை என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு. சிலர் வீடுகளில் மோட்டார் பம்ப்செட் மூலம் குடிநீரை திருடுவதும் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற முறைகேடால், அருகிலுள்ள வார்டுகளுக்கு தண்ணீர் சீராக வருவதில்லை. நகராட்சி தலைவர் (பொறுப்பு) கவிதா கூறியதாவது: குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. கோடையில் இதை தவிர்க்கும் பொருட்டு, ஆறு இடங்களில் குடிநீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது. வறட்சி நேரங்களில் இத்தொட்டி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் திருட்டு என்பது தடுக்க முடியாத ஒன்றாகி விட்டது. பம்ப்செட் மூலம் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பம்ப்செட் பறிமுதல் செய்யப்படும். இதுகுறித்து, விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.காவிரி குடிநீர் திட்ட செயற்பொறியாளர் பாலசண்முகம் கூறியதாவது: நகராட்சி குடிநீர் தொட்டியில், 1000 லிட்டர் தண்ணீர் ஏற்றுவதற்கு ரூ.4.50 வீதம், 30 லட்சம் லிட்டருக்கு தினமும் 13 ஆயிரத்து 500 ரூபாய் நகராட்சியிடம் வசூலிக்கிறோம். மின்சாரம் இல்லாத நேரங்களில், ஜெனரேட்டர் மூலம் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. எதிர்காலத்தில், இதற்குண்டான டீசல் செலவையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, என்றார்.