Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் தண்டபாணி உறுதி

Print PDF
தினத்தந்தி       03.05.2013

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் தண்டபாணி உறுதி


திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தண்டபாணி உறுதியளித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அனைத்து கவுன்சிலர்களுடான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெயா தலைமை தாங்கினார். கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் வெங்கட்ராஜ்(சுயே) பேசுகையில், மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை எடுத்து கூற வேண்டும் என்றார்.

வெள்ளை அறிக்கை தேவை


எதிர் கட்சி தலைவர் அன்பழகன்(தி.மு.க.) பேசுகையில், ‘‘மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குடிநீரே வராத நிலையில் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணத்தையும் உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றப்படுவது பொதுமக்களுக்கு எதிரானது என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் ரவிசங்கர் பேசுகையில், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகள் பற்றியும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடுத்துக்கூறினர்.

அதனைதொடர்ந்து கமிஷனர் தண்டபாணி பதில் அளித்து பேசியதாவது:–

ஆழ் துளை கிணறுகள்


திருச்சி மாநகராட்சியில் 6 இடங்களில் குடிநீர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 98 மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் கிடைத்தது, தற்போது 82 மில்லியன் லிட்டர் அளவு மட்டுமே கிடைக்கிறது.

16 மில்லியன் லிட்டர் அளவு குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மொத்தம் 48 ஆழ்துளை கிணறுகளில் 30 ஆழ்துளை கிணறுகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 18 ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் மாநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சின்டெக்ஸ் தொட்டி

தற்போது மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேபோல ஜெனரேட்டர் பயன்படுத்தி குடிநீர் தொட்டிகளில் குடிநீர் ஏற்றவும், லாரிகள் செல்ல முடியாத இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாகவும், அடி பம்புகளும் அமைக்கப்படும்.

கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகள் பற்றி தெரிவிக்கலாம். மேலும் எந்தெந்த பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை கண்டறிய கவுன்சிலர்கள் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். மின்மோட்டார்கள் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கோட்ட தலைவர்கள் லதா, மனோகர் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.