Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் 100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

Print PDF

தமிழ் முரசு            06.05.2013

சென்னையில் 100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடனடியாக 100 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், பக்கத்து மாவட்டங்களில் உள்ள விவசாய பம்ப் செட்டுகளிலிருந்து தினமும் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை கொள்முதல் செய்யவும் குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், பூண்டி, ரெட்ஹில்ஸ் நீர் ஆதாரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கிருந்து பெறப்படும் நீரின் அளவு அதிவேகமாக குறைந்து வருகிறது. பருவ மழை இல்லாமல் வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் வரும் சில நாட்களில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகரில் மொத்தம் 100 இடங்களில் புதிதாக உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 260 அடி வரை ஆழம் கொண்டவையாக இருக்கும். இந்த ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்தப்பட்டு, அருகில் டேங்க் வைக்கப்பட்டு, தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த பணிகளுக்கான டெண்டர் 2 ம் தேதியன்று திறக்கப்பட்டு போர்வெல் அமைக்க தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

பம்ப் செட்டிலிருந்து...: பூண்டி, காரணி, சிறுவானூர், சிறுவானூர் கண்டிகை, புல்லரம்பாக்கம், மோவூர், காந்தி நகர், கீழானூர், மேலானூர், ராமராஜன் கண்டிகை, வெள்ளியூர், வெள்ளியூர் சத்திரம், மாகரல், அத்தங்கி காவனூர், கொமக்கம்பேடு ஆகிய பகுதிகளில் பம்ப் செட் வைத்திருக்கும் உரிமைதாரர்கள் குடிநீர் வடிகால் வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த பம்ப் செட்டுகளிலிருந்து ஓராண்டுக்கு தண்ணீர் கொள்முதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட பம்ப் செட் உரிமையாளர் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை வாரியத்துக்கு தர வேண்டும்.

இதற்கான தொகை மாதம் தோறும் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பம்ப் செட்டை இயக்க வேண்டும். இதற்கான மின் கட்டணம், செலவினங்களை வாரியம் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.