Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி முடிந்தது நாளைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என அதிகாரிகள் தகவல்

Print PDF
தினதந்தி               06.05.2013

பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி முடிந்தது நாளைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என அதிகாரிகள் தகவல்


கோவைக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணி முடிந்து உள்ளது. எனவே நாளைக்குள் குடிநீர் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குடிநீர் திட்டம்

கோவை மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க சிறுவாணி அணையில் இருந்து 125 எம்.எல்.டி. தண்ணீர் தினமும் எடுக்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்து போனதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து குறைவான அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க பில்லூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டது. அதன்படி பில்லூர் ஒன்றாவது திட்டத்தில் இருந்து தினமும் 65 எம்.எல்.டி. தண்ணீரும், பில்லூர்–2–வது திட்டத்தில் இருந்து 55 எம்.எல்.டி தண்ணீரும் எடுக்கப்பட்டு வருகிறது.

திடீர் உடைப்பு

இதற்காக பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2–ந் தேதி இரவில் பில்லூர் முதல் திட்டத்தில் உள்ள குழாயில் கோவை வீரபாண்டி நாய்க்கனூரிலும், பில்லூர் 2–வது திட்டத்தில் கீரநத்தம் சூரிபள்ளம் அருகேயும் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் ஆறுபோன்று ஓடியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரிசெய்யும் பணியில் இறங்கினார்கள். பில்லூர் 2–வது திட்ட குழாயில் கசிவு மட்டுமே ஏற்பட்டதால் அது உடனே சரிசெய்யப்பட்டது.

சரிசெய்யப்பட்டது

முதலாவது குடிநீர் திட்டத்தில் உள்ள குழாயில் சுமார் 10 அடிக்கும் மேல் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உடைப்பை சரிசெய்தனர். பின்னர் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியது.

நேற்று காலை முதல் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாளைக்குள் சீராகும்


இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘பில்லூர் முதல் திட்டத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பு நேற்று (நேற்று முன்தினம்) இரவில்தான் சரிசெய்யப்பட்டது. பின்னர் சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம் என்று ஒவ்வொரு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாய் உடைப்பு காரணமாக 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போதுதான் குடிநீர் வினியோகம் தொடங்கி உள்ளதால் இன்னும் 2 நாட்களில் (நாளைக்குள்) அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்’ என்றனர்.