Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 22 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்

Print PDF
தினமணி       09.05.2013

ரூ. 22 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்:  முதல்வர் இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்


திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 22.22 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய குடிநீர்த் திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா வியாழக்கிழமை காணொளிக் காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலம் தொடக்கிவைக்கிறார். இது தொடர்பாக மேயர் விஜிலா சத்தியானந்த் புதன்கிழமை அளித்த பேட்டி:

 திருநெல்வேலி மாநகரத்தில் இப்போது தாமிரவருணி ஆற்றின் நீராதாரங்களில் இருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கப் பெற்று, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு நபருக்கு 95 லிட்டர் குடிநீர் வீதம் இப்போது வழங்கப்படுகிறது.

 இந்நிலையில், புதிய குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குடிநீர்த் திட்டப் பணிகளை மேம்படுத்த 4.12.08-ல் அரசாணை வெளியிடப்பட்டு ரூ. 22.22 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

 இத் திட்டத்தில் தலைமை குடிநீர் நிலையத்தில் புதிதாக 9 நீர் உறிஞ்சு கிணறுகள், தரைகீழ் நீர்த்தேக்கத் தொட்டிகள், மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டன.

 மேலும், 11 மேல்நிலைத் தொட்டிகள், 43.10 கிமீ நீளத்துக்கு பிரதானக் குழாய்கள், 89.85 கிமீ தொலைவுக்கு பகிர்மானக் குழாய் அமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டு, வீட்டுக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 இத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார். இதற்கான விழா பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே நடைபெறுகிறது. இத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, தினமும் 13.97 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். எனவே, நாளொன்றுக்கு நபருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்க முடியும். இதன் மூலம் 8, 9, 10, 19, 26, 27 ஆகிய வார்டுகளில் முழுமையாகவும், 31, 31 வார்டுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வசிக்கும் 78,611 பேர் பயனடைவர்.

 8, 9, 10 வார்டுகளுக்கான முதல் பகுதி திட்டத்தில் மொத்தம் 3,000 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் புதிதாக வழங்க முடியும். இதில் இதுவரை புதிய குடிநீர் இணைப்பு கோரி 264 பேர் விண்ணப்பித்துள்ளனர். 19, 26, 27 வார்டுகளுக்கான 2-வது பகுதி திட்டத்தில் மொத்தம் 18,600 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடியும். இதில் இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 மாநகராட்சியில் ஏற்கெனவே 63,120 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் உள்ளன என்றார் அவர்.

 துணை மேயர் பூ. ஜகநாதன் என்ற கணேசன், மண்டலத் தலைவர்கள் மேலப்பாளையம் ஹைதர் அலி, தச்சை மாதவன், மாநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் ஆர்.பி. ஆதித்தன் உடனிருந்தனர்.