Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர் திட்டங்களை முடிக்க முயற்சி

Print PDF
தினமலர்       22.05.2013

புதிய குடிநீர் திட்டங்களை முடிக்க முயற்சி


குன்னூர்:குன்னூர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கரடிபள்ளத்தில் புதிய கிணறு வெட்டப்படுகிறது;கரன்சி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சி நடக்கிறது.குன்னூரின் முக்கிய நீராதாரமாக திகழ்வது ரேலியா அணை. ஆங்கிலேயர் காலத்தில் 10 ஆயிரம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்த அணை கட்டப்பட்டது.

தற்போது, மக்கள் தொகை 1.5 லட்சமாக உயர்ந்து விட்ட நிலையிலும், இந்த அணையை தான் நகராட்சி நிர்வாகம் நம்பியுள்ளது.இதனால், அணையில் சேமிக்கப்படும் நீர் போதுமான இருப்பதில்லை. இதனை தவிர, ஜிம்கானா நீர்தேக்கம், கரடிபள்ளம், பந்துமி நீர்தேக்கங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. எனினும், மழை பொய்த்த காரணத்தால், நகரின் பல பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இதனால், சீசன் காலத்தில் உள்ளூர் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். வரும் காலத்தில் தண்ணீர் தேவையை எதிர்கொள்ள, புதிய குடிநீர் திட்டங்கள் குன்னூருக்கு அவசர அவசியமாக உள்ளது.கமிஷனர் சண்முகம் கூறியதாவது:

குன்னூரின் தண்ணீர் தேவையை பருவ மழை தான் பூர்த்தி செய்கிறது. மழை பொய்த்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை போக்க புதிய நீராதாரங்களை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கரடி பள்ளத்தில் புதிதாக ஒரு கிணறு வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், காந்திபுரம் உட்பட பகுதிகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். ஜிம்கானா நீர்தேக்கத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்தால், அப்பகுதியில் கூடுதல் நீர் தேக்க முடியும். கரன்சி குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பர்லியாறு ஊராட்சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. கரன்சி வனப்பகுதியில், ஒரு கி.மீ., தூரம் வரை, குழாய்கள் உயரமான பகுதியில் பதிக்கப்பட்டால் இந்த திட்டம் வெற்றி பெறும். ரேலியா அணையில் தடுப்பணை கட்டுவது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சண்முகம் கூறினார்.