Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"புதுக்கோட்டைக்கு தனி குடிநீர்த் திட்டம்'

Print PDF
தினமணி          23.05.2013

"புதுக்கோட்டைக்கு தனி குடிநீர்த் திட்டம்'


புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் நீடித்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதுக்கோட்டை நகருக்கென தனி குடிநீர்த் திட்டத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக புதுகையில் புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ஆர். முருகேசன் தெரிவித்தார்.

 புதுக்கோட்டையில் நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் தலைமையில், நகராட்சிப் பொறியாளர் ஜெ. சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் குடிநீர்ப் பிரச்னை குறித்து பெரும்பாலான உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு விளக்கமளித்தபோது ஆணையர், இத்தகவலை தெரிவித்தார்.

 நகர்மன்றத் தலைவர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் தொழில் பூங்காவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்துவதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நகர்மன்றம் சார்பில் பாராட்டுதலையும், நன்றியையும் அனைவரின் சார்பிலும் பதிவு செய்கிறேன். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேசையைத்தட்டி ஒலி எழுப்பி வரவேற்றனர்.

 எம். மோகன் (காங்): எனது வார்டில் உள்ள ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் உள்ள வீதியில் கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் கழிவுகளை குவித்து வருகின்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 வேங்கை அருணாச்சலம் (சுயே): தஞ்சை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் முதல் அண்ணாசிலை வரையுள்ள சாலையில் புதை சாக்கடைத் திட்டத்துக்கு தோண்டப்பட்டு, மூடப்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. காமராஜபுரம் 1 முதல் 10 வீதிகள் வரை வசிக்கும் மக்களுக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது.

 ஏ. இப்ராகிம்பாபு (காங்): எஸ்.எஸ். நகர்ப் பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படாத நிலை உள்ளது. மேலும், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர்பெறும் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் காவிரி குடிநீர் வரும் பிரதானக் குழாய்களில் மின் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நகர்மன்றத் தலைவர்: குடிநீரை லாரிகள் மூலம் விநியோகிப்பதற்காக முறையான அட்டவணை தயாரித்து ஓட்டுநர்களிடம் அளிக்கப்பட்டு, அதன்படி விநியோகம் செய்யப்படுகிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் குறுக்கிடாமல் முழு ஒத்துழைப்பு அளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது.

 என்.கே. அறிவுடைநம்பி (திமுக): புதை சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்து விடும் எனக் கூறப்பட்டது. ஆனால், எப்போது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரியவில்லை.

 செல்வம் (திமுக): அடப்பன்குளத்தை தூர் வாருவதற்கும் அதில் கிடைக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சுப. சரவணன் (திமுக): ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர் கதையாகி விட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நகராட்சியில் ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

 ஆணையர் முருகேசன்: கடந்த 1996 -ல் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமானது 15 வழியோர கிராமங்கள், 3 பேரூராட்சிகளைக் கடந்து கடைசியாக புதுக்கோட்டை நகராட்சிக்கு வருகிறது. அதனால், இத்தட்டுப்பாடு தொடர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டைக்கென தனி குடிநீர்த் திட்டத்தை உருவாக்கும் வகையில், குடிநீர் வடிகால் வாரியத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளோம்.

 இதுதொடர்பாக அடுத்த வாரம் சென்னையில் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெறவுள்ளது. மேலும், நூற்றாண்டு விழாவைப் பொறுத்தவரை சுமார் 70% பணிகள் கடந்த 11 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 இதைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் நினைவுத்தூண் அமைத்தல், நகர எல்லையில் நுழைவு வாயில்கள், நகராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவது, எல்.இ.டி விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளுக்கு அனுமதி ஆணை வழக்கப்பட்டுள்ளது.

 மொத்தத்தில் திட்டப் பணிகள் அனைத்தையும் அமைச்சர், எம்எல்ஏ-க்கள், ஆட்சியர் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் விரைந்து முடிக்கப்படும். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார்.