Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.3 கோடியில் 100 ஆழ்குழாய் மூலம் குடிநீர்... தேவையான இடங்களுக்கு 8 லாரிகளில் சப்ளை

Print PDF
தினமலர்               27.05.2013

ரூ.3 கோடியில் 100 ஆழ்குழாய் மூலம் குடிநீர்... தேவையான இடங்களுக்கு 8 லாரிகளில் சப்ளை


ஈரோடு: ஈரோடு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இதுவரை, 100 ஆழ்குழாய், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் தேவை அதிகரித்து வரும் பகுதிகளுக்குல, 12 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள, 60 வார்டுகளிலும் தினமும் மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் இருந்து, 5.40 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடிநீராக சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக காவிரியில் ஓடிய தண்ணீரை வைத்து, ஈரோடு மாநகராட்சி, மக்களுக்கு அரையும், குறையுமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது. தற்போது முற்றிலும் தண்ணீர் நின்று போனது.

ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலத்துக்கு எட்டு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் அவசரம் கருதி நான்கு லாரிகள் உட்பட மொத்தம், 12 லாரிகள் குடிநீர் சப்ளை செய்யும் பணி நடக்கிறது.

மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நகராட்சிகளான சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளான சூரியம்பாளையம், பெரிய அக்ரஹாரம் மற்றும் பஞ்சாயத்துகளான கந்தம்பாளையம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், 10 முதல், 15 நாட்கள் ஒரு முறை குறைந்த அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 34 ஆழ் குழாய்களை அமைக்க இரண்டு மாதங்களுக்கு முன் அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே, நமக்கு நாமே திட்டத்தில், 20 ஆழ்குழாய்களும், மாநகராட்சி பொது நிதியில் இருந்து வார்டு வாரியாகவும், குடிநீர் அதிக தட்டுபாடு உள்ள இடத்தில் கூடுதலாகவும் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீருக்காக மூன்று கோடி ரூபாய் செலவில், 100க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சியான பகுதியில் ஆழ் குழாய்கள் போடும்போது, அதிக ஆழத்தில் ஆழ்குழாய்கள் அமைக்க வேண்டியதுள்ளது. இதற்கென கூடுதல் செலவாகிறது. ஆனாலும், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆழ்குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது.

இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, மாநகராட்சி பொது நிதி, நமக்கு நாமே திட்டம் மூலம், 100 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக ஆழ்குழாய்கள் போடப்படுகிறது. பல இடங்களில் அதிகமான ஆழத்தில் ஆழ்குழாய்கள் போட்டால் தான் தண்ணீர் வருகிறது.

மேலும், எட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் நிலையில், மேலும் நான்கு லாரிகள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து, 800 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வீரப்பன்சத்திரம் மண்டல துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது: ஈரோடு சம்பத் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே ஆழ்குழாய்கள் உள்ள பகுதிகளில், மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அக்குடியிருப்பின் பின் பகுதியில் மேலும், 15 பொது குழாய்கள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

குடிநீர் தேவைகள் அதிகமுள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம், என்றார்.