Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நூற்றாண்டு கால கனவு நனவாகிறது: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தினமும் 16 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் நீரேற்றம் 10 ஆயிரம் கி.மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிப்பு

Print PDF
தினத்தந்தி          27.05.2013

நூற்றாண்டு கால கனவு நனவாகிறது: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தினமும் 16 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் நீரேற்றம் 10 ஆயிரம் கி.மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிப்பு


கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கனவு திட்டமான ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் காவிரி படுகையில் இருந்து 16 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக 2 மாவட்டங்களிலும் சுமார் 10 ஆயிரம் கி.மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்

நிலத்தடி நீரில் உப்பின் அளவு 1.5 மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் தான் அந்த நீர் குடிப்பதற்கு உகந்த நீராகும். ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் உப்பின் அளவு 1.5 மில்லி கிராமில் இருந்து 12.4 மில்லி கிராம் வரை உள்ளது.

இந்த தண்ணீரை குடிப்பதால் இந்த மாவட்ட மக்களுக்கு மூட்டு, முதுகெலும்பு வளைதல், முடக்குவாதம் போன்ற எலும்பு நோய்களும், பற்கள் கறைபடிதல் மற்றும் எலும்பு தசை நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கவும், 2 மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் காவிரி படுகையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் ரூ.ஆயிரத்து 928 கோடியே 80 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

30 லட்சம் மக்கள்

இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6 ஆயிரத்து 755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 30 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இந்த திட்டம் 5 தொகுப்புகளாக பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தொகுப்பு 1–ல் தலைமை பணியிடம், சுத்திகரிப்பு நிலையம், நீருந்து நிலையம் ஆகிய பணிகள் செய்யப்பட்டு, அடுத்தடுத்த தொகுப்புகளில் 2 மாவட்டங்களிலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், ராட்சத தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

16 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர்


இந்த திட்டத்தின் மூலம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு சராசரியாக 53 லிட்டர், 41 லிட்டர், 30 லிட்டர் என மொத்தம் 160 மில்லியன் லிட்டர் அதாவது 16 ஆயிரம் கோடி லிட்டர் சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கும் காவிரி நீர் படுகை கடல்மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஓசூர் செல்லும் போது கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 5 இடங்களில் ராட்சத நீரேற்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் கி.மீட்டர் தூரம்

இந்த திட்டத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களுக்கும் செல்லும் வகையில் 9 ஆயிரத்து 936 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க ஏதுவாக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு முதல் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு வரை உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. நீரேற்றும் நிலையத்தில் 1500 மி.மீட்டர் அளவு கொண்ட ராட்சத குழாய்கள் முதல் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க 63 மி.மீட்டர் அளவுள்ள குழாய்கள் வரை பதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இப்போது மட்டுமல்ல, எதிர்கால தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் 2021–ம் ஆண்டு மக்கள் தொகையாக எதிர்பார்க்கப்படும் 35 லட்சம் பேர் மற்றும் 2036–ம் ஆண்டு மக்கள் தொகையாக எதிர்பார்க்கப்படும் 40 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

நூற்றாண்டு கால கனவு

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் என்பது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கனவு திட்டமாகும். இந்த திட்டம் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் மிகுந்த மகிச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் இதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலும், மாலை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திலும் நடைபெற்றது.

நேற்று மாலை ஓசூரை அடுத்த திண்ணூரில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தமிழக உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர் சங்கர், மாவட்ட கலெக்டர் ராஜேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் கோபால்ராம், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் அசோக்குமார், நகராட்சி தலைவர்கள் தங்கமுத்து, பாலகிருஷ்ணரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.