Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்

Print PDF
தினமணி        29.05.2013

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர்

ஜெயலலிதா புதன்கிழமை (மே 29) தொடக்கிவைக்கிறார்.

சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் (விடியோ கான்பரன்சிங்) திட்டத்தைத் தொடக்கிவைக்க தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் நேரடியாக காணும் வகையில் விழா ஏற்பாடுகள் இரு மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும், புளோரோசிஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,928 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இதில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ரூ.1,585.60 கோடியாகும். தமிழக அரசின் நிதி ரூ.307.48 கோடியாகும். இவைத் தவிர நகராட்சி, பேரூராட்சிகளின் பங்களிப்பாக ரூ.35.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ.63.67 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5 தொகுப்புகளாக நடைபெற்று வந்த பணிகளில் 90 சதத்துக்கும் மேலான பணிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை ரூ.1,200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. காவிரியாற்றிலிருந்து இயல்பு நீரை நீரேற்றம் செய்வதற்கான தலைமையிடப் பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாளொன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளும் முடிவடைந்துள்ளன. மின்னியந்திர உபகரணங்கள், இயல்பு நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டு செல்லும் குழாய்களின் சோதனைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இரு மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பொது சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து இயல்பு நீர் திறக்கப்பட்டு தொகுப்பு 2-இன் கீழ் தருமபுரி நகராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் நெசவாளர் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற வகை செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு 3-இன் கீழ் மொரப்பூர் பிரிவுச் சாலையிலிருந்து குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தொகுப்பு 5-இன் கீழ் பென்னாகரம் மடத்திலிருந்து 18 கி.மீ. தொலைவு வரையில் வெளிப்போக்கி குழாய் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதே முறையில் திட்டத்தின் அனைத்துத் தொகுப்புகளிலும் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய், கிளை குழாய்கள், பிரிவு பிரதான குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேலும், ஒகேனக்கல்லில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பொது சமநிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீரேற்றம் செய்யப்பட உள்ளது. 4 தொகுப்புகளின் கீழ் குழாய் பதித்தல், கட்டுமானப் பணிகள், மின் இயந்திரங்கள் நிறுவும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

7,679 ஊரகக் குடியிருப்புகளில் 50 சத குடியிருப்புகள், 16 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

தருமபுரி: தருமபுரியில் அரசுப் பொது மருத்துவமனை எதிரேயுள்ள அம்பேத்கர் காலனி அருகேயுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைவிடத்தில் விழா நடைபெறுகிறது. புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சியில் தொடக்கிவைக்க அதை நேரடியாகக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி: இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூரை அடுத்துள்ள தின்னூர் பொதுப் பணித் துறை வளாகத்தில் உள்ள சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைவிடத்தில் விழா நடைபெறுகிறது. இரு விழாக்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஆர்.லில்லி (தருமபுரி), டி.பி. ராஜேஷ் (கிருஷ்ணகிரி) மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.