Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவீன தொழில் நுட்பத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்

Print PDF
தினமலர்         29.05.2013

நவீன தொழில் நுட்பத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்


தர்மபுரி: ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் ஒகேனக்கல் காவிரியில் துவங்கி, ஓசூர் வரை குடிநீர் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. தினம், 160 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்று நீரை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திடட்டத்தில், ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு முன்பாக கூத்தப்பாடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட காவிரியாற்றில், 630 குதிரை திறனுள்ள நான்கு மின் மோட்டார் மூலம் நீர் பம்பிங் செய்யப்பட்டு நிமிடத்துக்கு ஒரு லட்சத்து, 18 ஆயிரம் லிட்டர் ஆற்று நீரை எடுத்து அங்கிருந்து, 6.2 கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள இரு இரும்பு குழாய் மூலம் ஆற்று நீர் பம்பிங் செய்யப்படுகிறது.

ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்திட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 12 ஏக்கரில், 127.6 மில்லியன் லிட்டர் ஆற்று நீரை முழுமையாக சுத்திகரிப்பு கட்டுமானங்கள் அமைத்து நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆயிரத்து, 245 குதிரை திறன் உள்ள நான்கு மின் மோட்டார்கள் மூலம் ஆயிரத்து, 800 மீ., தூரத்தில் உள்ள இடை நிலை நீருந்து நிலையத்துக்கு, ஆயிரத்து, 300 மி.மீ., விட்ட இரும்பு குழாய்கள் இரு பைப்லைன் மூலமாக பம்பிங் செய்யப்படுகிறது.

இடைநிலை நீரூந்து நிலையத்தில் இருந்து மீண்டும் ஆயிரத்து, 170 குதிரை திறன் உள்ள நான்கு மின் மோட்டார்கள் மூலம் 3.5 கி.மீ., தொலைவில் பென்னாகரம் அடுத்த மடத்தில் மேடான இடத்தில், 240 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட பிரதான குடிநீர் சேகரிப்பு தரை மட்ட தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆயிரம் மி.மீட்டர் விட்டமுள்ள இரண்டு எம்.எஸ்., குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு சேகரிக்கப்படுகிறது. நீரூந்து மையங்களில் மின் மோட்டர்கள் இரண்டு மாற்று ஏற்பாட்டுக்காக கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பிரதான குடிநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் ஆயிரத்து, 500 மீ.மீ., முதல், 450 மி.மீ., வரையுள்ள குழாய்கள் மூலம், 6 ஆயிரத்து, 945 கி.மீ., தூரம் பிரதான குழாய்கள் மூலம் தன்னோட்டமாகவே (ஓசூர் பகுதி தவிர) குடிநீர் வழங்கப்படுகிறது.

ஓசூர் மற்றும் அதன் வழியோர குடியிருப்புகள் மேடான பகுதியில் அமைத்து இருப்பதால், அக்குழாய்ப் பாதையில் நான்கு இடங்களில் இடைநிலை நீருந்து நிலையங்கள் அமைத்து பம்ப்பிங் செய்து குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் குடிநீர், 2 ஆயிரத்து, 275 மேல்நிலை தொட்டிகளில் தேக்கப்பட்டும், 2, ஆயிரத்து 277 கி.மீ., நீள பகிர்மான குழாய்கள் அமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

நீர் சுத்தகரிப்பு தொழில் நுட்பம்: ஒகேனக்கல் - பென்னாகரம் சாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினம், 160 மில்லியன் லிட்டம் சுத்திகரிப்பு செய்யும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு நீர் அளவிடும் மற்றும் ரசாயன கலப்பு தொட்டி, தெளிவு செய்யும் எட்டு தொட்டிகள், 12 வடிபடுகை, குளோரின் கலக்கும் தொட்டி, 70 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டு சுத்த நீர் சேகரிப்பு தொட்டி, சுத்த நீரேற்று நிலையம் மற்றும் மின் சாதன அறை, ரசாயன சேமிப்பு கிடங்கு (குளோரின்), ரசாயன சேமிப்பு கிடங்கு (படிகாரம் மற்றும் சுண்ணாம்பு),வண்டல் சமநிலை தொட்டி, வண்டல் திடப்படுத்தி, வண்டல் உலர் தொட்டி, நீர் அழுத்த முறிவு உபகரணம் ஆகிய கட்டமைப்புகள் சுத்திகரிப்பு நிலையில் அடங்கியுள்ளன.