Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்

Print PDF

தினபூமி                 30.05.2013

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM(C)_13.jpg

சென்னை, மே.30 - ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கருணாநிதி ஆட்சியால் முடக்கி வைக்கப்பட்டது என்று, சென்னை தலைமைச் செயலகத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா  பேசியுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் மசநூரி நக்கனோ,  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் முதுநிலை பிரதிநிதி டோமோஹைடு சிகூசி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசுச் செயலாளர்  கே.பணீந்திர ரெட்டி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

தர்மபுரி மற்றும் கிருழணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். இதனை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1986 ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. 

நான் முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 

1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக, இத்திட்டத்தை அப்போது நிறைவேற்ற இயலவில்லை. 

நான் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசால் திட்ட அறிக்கை திருத்தி அமைக்கப்பட்டு, தர்மபுரி மற்றும் கிருழணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6755 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதி உதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு 18.8.2005 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

இதற்கு கர்நாடக பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் 27.3.2008 அன்று ஒகேனக்கல்லில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று 26.3.2008 அன்று நான் அறிவித்தேன். இதனைத் தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பைத்தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரும் தீர்மானம் 27.3.2008  மற்றும் 

1.4.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், திடீரென்று 5.4.2008 அன்று சட்டப் பேரவைக்கு தெரிவிக்காமலேயே கைர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி; தேவைப்பட்டால் களம் காண்போம் என்று கூறி அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தார் அன்றைய முதலமைச்சர்  மு.கருணாநிதி.  

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைத்த முன்னாள் முதலமைச்சர்,  கருணாநிதியின் செயலைத் தட்டிக் கேட்கும் வண்ணம் 8.4.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நான் சென்று, இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், திமுக-வைச் சேர்ந்த, அன்றைய பேரவைத் தலைவர் அதனை அனுமதிக்கவில்லை.  

அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பேரவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நான், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற துணிவில்லாத முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அரசியல் உறுதி மிக்க அரசு தான் மக்களுக்குத் தேவை என்றும், அத்தகைய அரசை அ.தி.மு.க. வழங்கும் என்றும் நான் தெரிவித்தேன்.  

பின்னர், ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், 50 விழுக்காடு பணிகள் முடிவுற்று இருந்து இருக்க வேண்டும். ஆனால், அன்றைய நிலையில், வெறும் 18 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிவடைந்து இருந்தன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால், தற்போது இந்தத் திட்டம் இன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கிருழணகிரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற  மு.க.ஸ்டாலின், 2012 டிசம்பர் மாதம் முடிவடைந்து இருக்க வேண்டிய இந்தத் திட்டம் என்னுடைய அரசால் கிடப்பில் போடப்பட்டதாகர பொய்ப் பிரச்சாரம் செய்தார். பின்னர் இந்தத் திட்டம் முடிவடையும் தருவாயில் இருப்பதை தெரிந்து கொண்டதாலோ, என்னவோ, இந்தத் திட்டத்தை தன்னிடம் ஒப்படைத்தால் இரு மாதங்களில் திட்டத்தை நிறைவு செய்வதாக இந்த மாதம் தர்மபுரிக்கு சென்ற  ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, இரண்டாண்டு காலத்தில் செய்யாததை, ஆட்சியில் இல்லாத போது இரண்டு மாதத்தில் நிறைவு செய்வதாக  ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.   

1928 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்தத் திட்டத்தை இன்று துவக்கி வைத்ததில் நான் பெருமிதம் அடைகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, விடை பெறுகிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.