Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடர் மழை எதிரொலி சிறுவாணியில் நீர் உறிஞ்ச கேரள அரசு அனுமதி

Print PDF
தமிழ் முரசு               12.06.2013

தொடர் மழை எதிரொலி சிறுவாணியில் நீர் உறிஞ்ச கேரள அரசு அனுமதி

கோவை:கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரளாவில் உள்ளது. கடும் வறட்சியால் 1.5 மீட்டர் (மொத்த உயரம் 15 மீட்டர்) மட்டுமே தண்ணீர் உள்ளது. ஆங்காங்கே குட்டை போல் தேங்கியுள்ள நீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி வினியோகிக்கும் பணி நடக்கிறது. அணையில் நீர் எடுப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நேற்று வரை குடிநீர் பெற ஒப்புதல் வழங்கப்பட்டது. கேரள அரசின் நீர் எடுப்பு கெடு காலம் நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் குடிநீர் பெற முடியுமா, அணை மூடப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பருவ மழை நீடிப்பதால் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே வாரத்தில் அணை நீர் மட்டம் 60 செ.மீ வரை உயர்ந்து விட்டது. மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை தொடர்ந்து எடுக்கிறோம். இதற்கு ஒப்புதல் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மழை தினமும் பெய்வதாலும், அணைக்கு தினமும் 6 முதல் 7 கோடி லிட்டர் தண்ணீர் வருவதாலும் கேரள நீர்ப்பாசனத் துறையினர் தொடர்ந்து குடிநீர் எடுக்க நேற்று ஒப்புதல் வழங்கினர். இன்று வழக்கம் போல் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் பெறப்படும்.

கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நேற்று அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 30 மி.மீ மழை பெய்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 150 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மழை நீடிப்பதால் அணை நீர்மட்டம் குறைய வாய்ப்பில்லை. இன்னும் 50 செ.மீ நீர் மட்டம் உயர்ந்தால் மோட்டார் இல்லாமல் நேரடியாக வால்வு மூலம் குடிநீர் பெற முடியும். இன்னும் 3.5 மீட்டர் அளவு நீர் மட்டம் உயர்ந்தால், குறைந்தபட்ச இருப்பு நிலையை அணை அடைந்துவிடும். அதன்பின், கேரள அரசின் ஒப்புதல் இல்லாமல் குடிநீர் பெற முடியும்‘ என்றார்.