Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளுந்தூர்பேட்டையில் குடிநீர் விநியோகம் சீரானது

Print PDF

தினமணி               19.06.2013

உளுந்தூர்பேட்டையில் குடிநீர் விநியோகம் சீரானது

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு மட்டிகை கிராமத்திலிருந்து குடிநீர் வரும் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு, செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.

  இப்பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட மட்டிகை, ஆண்டிக்குழி, நரியின் ஒடை, கூ.கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் ஆழ்துளை குழாய் மூலம் நீர் எடுக்கப்படுகிறது. இந்த நீர் சுமார் 15 கிமீ தூரம் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வளாகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

  அண்மைக்காலமாக அடித்த கடும் வெயில் காரணமாக, பூமிக்கடியில் இருந்த குழாய்களில் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி வீணாகியது. இதனால் விநியோகம் பாதித்து, உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

  இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் உடைப்பு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் ரயில்வே கேட் அருகில் பெரிய குழாயில் ஏற்பட்டஉடைப்பை சரிசெய்யும் பணி பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மாற்று குழாயை புதைத்து சீரமைத்தனர். இதையடுத்து உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் சீரானது.