Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜூலை முதல் புதிய குடிநீர் இணைப்பு: மேயர் அறிவிப்பு

Print PDF

தினமணி               19.06.2013

ஜூலை முதல் புதிய குடிநீர் இணைப்பு: மேயர் அறிவிப்பு

கோவை மாநகராட்சிப் பகுதியில் ஜூலை மாதம்முதல் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் செ.ம. வேலுசாமி அறிவித்தார்.

கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

சிங்கை பாலன் (அதிமுக): கடந்த காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தது. அதனால் புதிய குடிநீர் இணைப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போது குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ள நிலையில், புதிய குடிநீர் இணைப்புக்கான தடையை நீக்க வேண்டும்.

மேயர்: குடிநீர் பிரச்னை தீர்ந்தது மகிழ்ச்சி தருகிறது. கோவை மாநகராட்சிப் பகுதியில் சுமார் 3000 பேர் குடிநீர் இணைப்பு கோரி காத்திருக்கின்றனர். குடிநீர்ப் பிரச்னை தீர்ந்துள்ள நிலையில், வரும் ஜூலைமுதல் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் 60 பிளம்பர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 100 வார்டுகளுக்கு மேலும் 40 பிளம்பர்களை நியமித்துவிட்டு, அதன்பின் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்.

ராஜ்குமார் (வடக்கு மண்டலத் தலைவர்): கோவை வ.உ.சி. பூங்காவில் தள்ளுவண்டிகளை நிறுத்தி நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொள்கின்றனர். வ.உ.சி. பூங்காவில் நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது. இக்கடைகளில் தரமற்ற உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் குழந்தைத் தொழிலாளர்களும் அதிக அளவில் வேலை செய்கின்றனர்.

நஞ்சப்பா சாலையில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளனர்.

மேயர்: வ.உ.சி. பூங்காவில் அனுமதியற்ற கடைகள் அகற்றப்படும். நாய்களுக்கு கர்ப்பத் தடை செய்வதற்கு மாநகராட்சி ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளது. உடனடியாக இப் பிரச்னை தீர்க்கப்படும்.

வடக்கு மண்டலத் தலைவர்: கணபதி பகுதியில் தெருவிளக்குகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒருசில மணி நேரம் மட்டும் தெருவிளக்குகள் எரிகின்றன. போக்குவரத்தைச் சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ள போலீர், கிராஸ்கட் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். காவல்துறையினரின் இந்த முடிவு பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேயர்: தெருவிளக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரிக்கலாம்.