Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தென்மேற்கு பருவமழை தீவிரம்: சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக உயர்வு கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி குடிநீர் வினியோகம்

Print PDF

தினத்தந்தி               26.06.2013

தென்மேற்கு பருவமழை தீவிரம்: சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக உயர்வு கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி குடிநீர் வினியோகம்


சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணை

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் அணை வறண்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனால் கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குட்டை போல் தேங்கி கிடந்த பகுதியில் இருந்து 6 மோட்டார்கள் வைத்து, தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் அவல நிலை ஏற்பட்டது.

190 சென்டி மீட்டர் மழை

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 190 மில்லி மீட்டர்(19 சென்டி மீட்டர்) மழை பெய்தது. இதனால் சிறுவாணி அணையின் இருப்பு நிலைக்கு மேல் நீர்மட்டம் கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்படும் 4 வால்வுகளில் 2 வால்வுகள் தண்ணீருக்குள் மூழ்கி விட்டன. இதனால் சிறுவாணி அணையின் (மொத்த கொள்ளவு 50 அடி) நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளது.

தினசரி 60 எம்.எல்.டி தண்ணீர்

இது குறித்து கோவை குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் இக்பால், சம்பத் குமார் ஆகியோர் கூறுகையில், சிறுவாணி அணையின் மேற்புறத்திலும், அடிவாரத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி (6 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை விட, இது 5 அடி கூடுதல் ஆகும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அணை நிரம்பினால் சிறுவாணி குடிநீருக்கு பிரச்சினை இருக்காது என்று அவர்கள் கூறினார்கள்.