Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம் மாநகராட்சி கமிஷனர் லதா தகவல்

Print PDF

தினத்தந்தி               26.06.2013

கோவையில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம் மாநகராட்சி கமிஷனர் லதா தகவல்


கோவை மாநகராட்சி பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர்லதா கூறினார்.

சிறுவாணி அணை

கடந்த ஆண்டுகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் ஆற்றில் இருந்து 6 மோட்டார்கள் மூலம் பம்பிங் செய்து குடிநீர் எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கும் போது தினசரி 30 எம்.எல்.டி குடிநீர் தான் கோவைக்கு வினியோகம் செய்ய முடிந்தது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் இருப்பு நிலையை தாண்டி தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நேற்று மட்டும் 65 எம்.எல்.டி குடிநீர் கோவைக்கு எடுக்கப்பட்டது. சிறுவாணியின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கோவைக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி விட்டது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

பில்லூர் குடிநீர் திட்டங்கள்

இதைத் தொடர்ந்து பில்லூர் முதல், மற்றும் 2–வது குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவான 125 எம்.எல்.டியில் இருந்து 120 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதி வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இது தவிர குறிச்சி குனியமுத்தூர் பகுதிகளில் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. மேலும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 11 எம்.எல்.டி தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கோவை மாநகராட்சியை பொறுத்தவரை விரிவுப்படுத்தப்பட்டு 100 வார்டுகள் ஆகி விட்டதால் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் என்பது பிரச்சினையாக இருந்தது.

4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

சமீபகாலமாக ஒரு சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு அதிகரித்துள்ளதால், கோவையில் குடிநீர் வினியோகம் சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த கோவை மாநகராட்சி கமிஷனர் லதா விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– கோவைக்கு தற்போது பில்லூர், சிறுவாணி அணைகள் மூலம் தினசரி 10 எம்.எல்.டி கூடுதலாக குடிநீர் கிடைக்கிறது. இதனால் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து பகுதிகளிலும் சீராக கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.