Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

Print PDF

தினமணி               27.06.2013

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

காஞ்சிபுரத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி நிர்வாகம் மாற்று வழிகளைக் கையாண்டு வருகிறது.

 காஞ்சிபுரம் நகராட்சிக்கு ஓரிக்கை பாலாறு, திருப்பாற்கடல் பாலாறு ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது காஞ்சிபுரத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலாற்றில் தண்ணீர் ஓட்டம் இல்லாதது, பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

உரிய காலத்தில் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியிருந்தால் ஓரளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி இருக்க முடியும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 தொடர் மணல் கொள்ளையால் காஞ்சிபுரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் செயல்படும் பாலாற்று குடிநீர்த் திட்டங்கள் முடங்கியுள்ளன. குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக குடிநீர் பஞ்சம் என்ற வார்த்தையை கேட்டறியாத காஞ்சிபுரம் மக்கள் இப்போது குடிநீர் பஞ்சத்தால், தினமும் சாலையில் காலிக் குடங்களுடன் வந்து நிற்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓரிக்கை பாலாறு படுகையில் உள்ள குடிநீர் ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் கிடைக்காததால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. தினமும் குடிநீர் விநியோகித்த காலம் போய், 2 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்க முடியும் என்று நகராட்சி அறிவித்தும் பயனில்லாமல் உள்ளது.

 குறிப்பாக 18, 19, 20, 21, 22, 23 ஆகிய வார்டு பகுதிகளுக்கு காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இத்தொட்டிக்கு ஓரிக்கை பாலாற்று நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் ஏற்றப்படுகிறது. ஆனால் போதிய அளவு அழுத்தம் இல்லாமல் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 எனவே இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு திருப்பாற்கடல் பாலாற்று குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் ஏற்றி விநியோகிக்க நகராட்சி முடிவு செய்யது. அதற்காக காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள திருப்பாற்கடல் பிரதான பைப் லைனையும்,

ஓரிக்கை பாலாறு பிரதான பைப் லைனையும் இணைத்து திருப்பாற்கடல் நீரை பஸ் நிலைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 நாள்களாக நடந்து வருகிறது. இதன் மூலம் குடிநீர் பாதிப்பு இல்லாமல் விநியோகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 23-வது வார்டு பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர் விமலா, தலைமை பொறியாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.

  இதற்கிடையில் குடிநீர் வழங்க நகராட்சி செய்து வரும் மாற்றுப்பணிகளை பார்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் சோமசுந்தரம், பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Last Updated on Thursday, 27 June 2013 07:28