Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு குடிநீர் விநியோகம் தொடக்கம்

Print PDF

தினமணி             05.07.2013

இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு குடிநீர் விநியோகம் தொடக்கம்

பில்லூர் அத்திக்கடவு குடிநீர் விநியோகத்திற்காகப் பதிக்கப்பட்ட சிமென்ட் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், அதற்குப் பதிலாக இரும்புக் குழாய் பதிக்கும் பணிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து குடிநீர் விநியோகம் தொடங்கியது.

வெள்ளியங்காட்டிலிருந்து வீரபாண்டி, வையம்பாளையம் வழியாக கோவை மாநகரின் ஒரு பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக அப்போது சிமென்ட் குழாய்கள் பதிக்கப்பட்டன. நீரின் அழுத்தம் காரணமாக அடிக்கடி குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு நீர்க் கசிவுகள் ஏற்பட்டன. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பதற்காக, குடிநீர் வடிகால் வாரியம் சிமென்ட் குழாய்களுக்கு மாற்றாக, அதன் அருகிலியே 1,500 மி.மீ. குறுக்கு விட்டமுடைய இரும்புக் குழாய்களைப் பதிக்க முடிவு செய்தது.

இதையடுத்து வீரபாண்டிப் பிரிவிலிருந்து கரட்டு மேடு வரை சுமார் 10 கிமீ தூரத்திற்கு இவை பதிக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக இப்பணிகள் நடந்தன. நிறைவாக வீரபாண்டி பிரிவில் உள்ள நீர் அழுத்த வெளியேற்று வால்வு இரும்புக்குழாயின் பாதையில் இணைக்கப்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் சொக்கலிங்கம் தலைமையில் பணியாளர்கள் பலர் பொக்லைன் உதவியுடன் இப்பணியில் ஈடுபட்டனர். இனிமேல் இரும்புக் குழாய்கள் வழியாகவே குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதால், பிரச்னை ஏதும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.