Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை

Print PDF

தினகரன்            08.08.2013

குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் மக்களை தேடி மாநகராட்சி திட்டத்தின்கீழ் நேற்று 120 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் இந்த பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

மாநகராட்சி 11வது வார்டு அசோகபுரத்தில் நேற்று மக்களை தேடி மாநகராட்சி திட்டத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவிதொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 120 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் 100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஆழ்குழாய் பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆழ்குழாய் கிணற்றை தூர்வாரவும் தண்ணீர் கிடைக்காவிட்டால் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மல்லிகா பரமசிவம் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் மல்லிகா பரமசிவம் கூறுகையில், 11வது வார்டு பகுதியில் 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தீரன் சின்னமலை வீதி, சுக்கிரமணியவலசு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பொது நிதி மூலமாக நேதாஜி வீதி, வைராபாளையம்ரோடு ஆகிய பகுதிகளில் 4.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்தல் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அசோகபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 4.90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம், கழிப்பிடங்கள் மராமத்து பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு பொது நிதியில் இருந்து லட்சுமிநகர் பகுதியில் புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் 3.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், விசாலாட்சி வேபிரிட்ஜ், கலைமகள் வீதி, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர்வடிகால் கட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் ஆறுமுகம், வார்டு கவுன்சிலர் ஜெயராஜ்(எ)முனுசாமி, உதவி ஆணையர் சண்முகவடிவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.