Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீராணம் நீர் சென்னை வந்தது: அமைச்சர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி             19.08.2013

வீராணம் நீர் சென்னை வந்தது: அமைச்சர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Veeranam(C).jpg 

சென்னை, ஆக.19 - முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வீராணத்தில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 17) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 18) சென்னையில் வீராணம் நீர் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் நகரில் குடிநீர் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் குடிநீர் தேவைக்காக நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான புதிய வீராணம் திட்டம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதற்காக வீராணம் ஏரியில் இருந்து சென்னை வரை சுமார் 230 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் வீராணம் ஏரி வறண்டது. 

இதனால் சென்னைக்கு வரும் வீராணம் நீர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்த கன மழை காரணமாக அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது.

நீர் திறப்பு: மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையின் உபரி நீர் கடந்த 7-ம் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வரத் தொடங்கியது. தற்போது வீராணம் ஏரியின் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவில் 65 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து முதல்வரின் உத்தரவின்பேரில் சென்னையின் குடிநீர் தேவைக்காக சனிக்கிழமை வீராணம் நீர் திறந்துவிடப்பட்டது. சிதம்பரம் அருகில் உள்ள வடக்குத்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி காலை 11 மணிக்கு வீராணம் நீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னைக் குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை வந்தது: வீராணத்திலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் சென்னை போரூர் நீர்உந்து நிலையத்துக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வந்தடைந்தது. அதன் பிறகு நகரின் மற்ற நீர் உந்து நிலையங்களுக்கு நீர் திருப்பி விடப்பட்டது.

நேற்று முதல் மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளுக்கு வீராணம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதாக குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பற்றாக்குறை குறையும்: சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு நாளொன்றுக்கு, 83-ல் இருந்து 87 கோடி லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். பற்றாக்குறை காரணமாக கடந்த சில மாதங்களாக 55 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வந்தது.

வீராணம் நீர் வரத் தொடங்கியுள்ளதால் நகரில் குடிநீர் விநியோகம் 18 கோடி லிட்டர் அதிகரிக்கும் எனவும் இதனால் நகரில் குடிநீர் பற்றாக்குறை குறையும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.