Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் 30 வார்டுகளில் தினமும் குடிநீர் :இன்று முதல் அமலுக்கு வருகிறது

Print PDF

தினமலர்                19.08.2013

மாநகராட்சியில் 30 வார்டுகளில் தினமும் குடிநீர் :இன்று முதல் அமலுக்கு வருகிறது


கோவை:கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி குடிநீர் தேவைக்கேற்ப கிடைப்பதால், 30 வார்டுகளில் தினமும் இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் இன்று முதல் துவங்குகிறது.கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், சிறுவாணி திட்டத்தில் தினமும் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சி காரணமாக சிறுவாணி திட்டத்தில் தினமும் 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்தது.இதனால், சிறுவாணி குடிநீர் குழாயுடன், பில்லூர் குடிநீர் திட்டத்தை இணைத்து, சிறுவாணிக்கு பதிலாக பில்லூர் குடிநீர் வழங்கப்பட்டது. மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கவில்லை.

பழைய மாநகராட்சி பகுதியில் வாரம் ஒருமுறை, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிறுவாணி அணை நிரம்பியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கிறது. இதனால், சிறுவாணி சப்ளை உள்ள வார்டுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான்கு மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த முறையை மாற்றி, சிறுவாணி வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பழைய மாநகராட்சி பகுதியில் 30 வார்டுகளில் இன்று முதல், தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது.

இதற்கான பணிகளில் மாநகராட்சி பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொறியாளர்கள் கூறுகையில், "மாநகராட்சியில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இன்றைய (நேற்று) நிலவரப்படி சிறுவாணி திட்டத்தில் 96.25 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. பில்லூர்-1 திட்டத்தில் 64.83 மில்லியன் லிட்டர் தண்ணீரும், பில்லூர்-2 திட்டத்தில் 37.39 மில்லியன் லிட்டர் தண்ணீரும், வடவள்ளி - கவுண்டம்பாளையம் திட்டத்தில் தினமும் 11.21 மில்லியன் லிட்டரும், ஆழியாறு திட்டத்தில் 7.64 மில்லியன் லிட்டரும் தண்ணீர் கிடைத்தது.சிறுவாணி திட்டத்தில் தேவைக்கேற்ப குடிநீர் கிடைப்பதால், தினமும் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

காந்திபார்க் மேல்நிலைத்தொட்டியில் 2 லட்சம் லிட்டர், பாரதிபார்க் தொட்டியில் 3 லட்சம் லிட்டர், டாடாபாத் தொட்டியில் 2 லட்சம் லிட்டர், சித்தாபுதூர் தொட்டியில் 2.5 லட்சம் லிட்டர், வ.உ.சி., பூங்கா தொட்டியில் 2 லட்சம் லிட்டர், டவுன்ஹால் தொட்டியில் 1.5 லட்சம் லிட்டர், ஆர்.எஸ்.புரம் தொட்டியில் 2 லட்சம் லிட்டர் சிறுவாணி குடிநீர் தேக்கப்படுகிறது. இதனால், ஆர்.எஸ்.புரம், ராம்நகர், சிவானந்தாகாலனி, டாடாபாத், காந்திபுரம், சித்தாபுதூர், காட்டூர், ரேஸ் கோர்ஸ், கோட்டைமேடு, பி.என்.புதூர், கடைவீதி பகுதிகளில் 30 வார்டுகளுக்கு தினமும் 2 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் நாளை (இன்று) முதல் செயல்படுத்தப்படவுள்ளது' என்றனர். மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு கூறுகையில், ""முதலில் 30 வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்படுகிறது. இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கும் போது, பொதுக்குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ள குடிசைப்பகுதிகளுக்கு தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காவிட்டால், கூடுதலாக 30 நிமிடம் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.